மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

தாக்கவரும் தீவிரவாதிகள்: ராணுவ தளபதி!

தாக்கவரும் தீவிரவாதிகள்: ராணுவ தளபதி!

பாகிஸ்தானின் பால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும், இந்தியாவுக்குள் ஊடுருவ 500 தீவிரவாதிகள் காத்திருப்பதாகவும் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், இளம் ராணுவ வீரர்களுக்காக ஒய்.டி.டபிள்யூ என்ற புதிய பிரிவை பிபின் ராவத் இன்று (செப்டம்பர் 23) தொடங்கி வைத்தார். இளம் வீரர்களை அதிகாரிகளாக மாற்றுவதற்காக இந்த பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பால்கோட்டில் உள்ள, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்து 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “ மீண்டும் பால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம் செயல்படத் தொடங்கியுள்ளது” என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்குள் 500 தீவிரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் அனைத்து ஊடுருவலையும் முறியடிப்பதில் இந்திய ராணுவம் உறுதியாக இருக்கிறது. எல்லையில் அத்துமீறிய தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியும். பெரும்பாலான ஊடுருவல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும், அவர்களைக் கையாளும் பாகிஸ்தானில் உள்ள நபர்களுக்கும் இடையில் தகவல் தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு இடையிலான தகவல் தொடர்பில் எந்தவித துண்டிப்பும் இல்லை என்று கூறினார்.

“இஸ்லாம் குறித்து சில தவறான தகவல்களைப் பரப்பி அதன் மூலம் பிரச்சினைகளை உருவாக்க விரும்புகின்றனர். இந்நிலையில் இஸ்லாம் குறித்துச் சரியான அர்த்தத்தை அதனை புரிந்தவர்கள் பரப்பவேண்டும் என்று பிபின் ராவத் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக தீவிரவாத ஊடுருவல் குறித்துப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவுடன் நேருக்கு நேர் மோதத் துணிச்சல் இல்லாமல் தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தப் பாகிஸ்தான் முயல்கிறது. எத்தனை தீவிரவாதிகளை வேண்டுமானாலும் பாகிஸ்தான் அனுப்பி வைக்கட்டும். ஆனால் அவர்களில் ஒருவர் கூட மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியாது என்று கூறியிருந்தார். நேற்று (செப்டம்பர் 22) பிகார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon