மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

வெற்றிக்குப் போராடும் காப்பான்!

வெற்றிக்குப் போராடும் காப்பான்!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கே .வி .ஆனந்த் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் காப்பான்.

இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, சாயிஷா ஆகியோர் நடித்திருக்கின்றனர். தொடர் தோல்வியில் இருந்து வரும் நடிகர் சூர்யாவுக்கு காப்பான் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

சமீப வருடங்களாக வந்த படங்களில், சமகால அரசியலை இவ்வளவு நேரடியாக எந்த ஒரு முன்னணி நடிகரும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களில் பேசியதில்லை. காப்பான் படத்தில் சூர்யா: இயற்கை விவசாயம், டெல்டா மாவட்டங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, இவற்றுக்கு ஆதரவு தரும் அரசாங்க கொள்கை ஆகியவற்றை நேரடியாக பேசியிருந்தார்.

இயக்குநர் எழுதிய வசனம் என்றாலும் அதனை ஒரு வியாபார முக்கியத்துவம் உள்ள கதாநாயகன் திரையில் பேசுகிற பொழுது அந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாகவே ஹீரோக்கள் இதுபோன்ற வசனங்களை பேசுகிற பொழுது, ‘இதனால் தனக்கு தொழில்ரீதியாக இடையூறு ஏற்படும் அல்லது தனது நட்சத்திர அந்தஸ்துக்கு நஷ்டம் ஏற்படும்’ என்று ஒதுங்கி விடுவது உண்டு.

இதிலிருந்து சூர்யா வித்தியாசப்பட்டு டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை காப்பான் படத்தில் தன் கதாபாத்திரத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார். இந்தப் படம் தொடங்கியதிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்குவரும் வரை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது.

சூர்யா நடித்து வெளிவரும் படங்களுக்கு எப்போதும் ஓபனிங் இருக்கும். ஆனால் காப்பான் படத்திற்கு ஓபனிங் இல்லை. காப்பான் படத்தின் தமிழக உரிமை சுமார் 22 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் வசூல் தொடக்க நாளிலிருந்து நேற்று வரை மந்தமாகவே இருக்கிறது. சென்னை நகரம் செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் காப்பான் கிட்டத்தட்ட அரங்கு நிறைந்த காட்சிகளாக நேற்றுவரை ஓடியிருக்கிறது. காப்பான் திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் ஈட்டிய மொத்த வசூல் 14.75 கோடி ரூபாய்.

காப்பான் படத்திற்கு ஓபனிங் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று திரையரங்க வட்டாரத்தில் விசாரித்தபோது, சமகால அரசியலை சமரசமின்றி பேசக்கூடிய படம் காப்பான். ஆனால், இந்தப் படத்தை முறையாக வெகுஜன மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியை தயாரிப்பு நிறுவனம் செய்யவில்லை என்கின்றனர்.

காப்பான் படம் திரையிட்டுள்ள திரையரங்குகளில் இன்றைய காலை காட்சிகளுக்கு 50 சதவிகித டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இது 70 சதவிகிதமாக இருந்திருந்தால் காப்பான் வெற்றிப்படம் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon