மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

காவேரி கூக்குரல்: தஞ்சையில் தொடங்கியது சரித்திரம்!

 காவேரி கூக்குரல்: தஞ்சையில் தொடங்கியது சரித்திரம்!

காவேரியைக் காண கண்பூத்துக் காத்திருக்கும் டெல்டாவில், ‘காவேரியின் கூக்குரல்’ பயணம் செப்டம்பர் 14 ஆம் தேதி வருவதற்கு முன்பே விவசாயிகளின் கூக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது. ஏனென்றால் திருச்சி தொடங்கி, தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் என டெல்டா பகுதிகளுக்கெல்லாம் இப்போதுதான் காவேரித் தண்ணீர் வந்து சேர்ந்திருக்கிறது.

ஏற்கனவே நெல் விதைகளை விதைத்து வைத்துவிட்டு அவ்வப்போது பெய்த மழையால் வயல்களை நனைத்து வைத்திருக்கும் டெல்டா விவசாயிகளுக்கு காவேரி கூக்குரல் பயணம் உடனடி ஆறுதலைத் தந்திருக்கிறது உண்மையான உண்மை.

சத்குருவுக்கு தஞ்சை என்றாலே அதீத பிரியம். ஏனெனில் சத்குருவின் 35 குழந்தைகளில் முக்கியமான குழந்தை தஞ்சையில்தான் வளர்ந்து வருகிறது. ஆம். தமிழகம் முழுதும் ஈஷா யோக மையத்துக்கு என 35 நாற்றுப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாற்றுப் பண்ணையிலும் காவேரிக் கரையில் நடுவதற்கான மரக் கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அந்த நாற்றுப் பண்ணைகளில் பெரிய பண்ணையான தஞ்சாவூர் பண்ணைக்குள் சத்குரு நுழைந்ததுமே அவரது முகம் மேலும் மலர்ந்தது. தஞ்சையின் நாற்றுப் பண்ணைக்குள் நுழைந்த சத்குரு, தாய் படுகையிலிருந்து இளம் நாற்றுகளை சிறிய பாக்கெட்டுகளில் அன்புடன் நடவுசெய்தார். காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் இந்த மரக்கன்றுகள்தான் முதன்முதலாக காவேரி நதிப்படுகைகளில் நடப்பட உள்ளது.

அப்போது பேசிய சத்குரு, “ இதுபோல் இன்னும் தமிழகத்திலுள்ள பல நாற்றுப் பண்ணைகள் ஒன்று சேர்ந்து மரக் கன்றுகளை தர முன் வந்தால், காவேரிக்கும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அது மிகுந்த பலனளிப்பதாக இருக்கும். அடுத்த இரண்டு வருடங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி குறித்து 10,000 விவசாயிகளுக்கு ஈஷா விவசாய இயக்கம் மூலமாக பயிற்சி அளிக்கப்படும். வருகின்ற நவம்பர் மாதத்தில் இப்பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட இருக்கின்றன” என்றும் கூறினார் சத்குரு.

மேலும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் நடப்பட இருக்கும் 242 கோடி மரக் கன்றுகளில் முதல் மரக் கன்றினை தஞ்சையில் நட்டு வைத்தார் சத்குரு. அந்தத் தருணம் அழகானது, அந்தத் தருணம் காவேரியின் சரித்திரத்தில் புதிய பச்சை எழுத்துகளால் எழுதப்பட வேண்டிய தருணம்.

இதுபற்றி தனது ட்விட்டரில் சத்குரு, “காவேரி கூக்குரலின் அங்கமாக, காவேரி டெல்டா பகுதியான தஞ்சாவூரிலுள்ள ஈஷா நாற்றுப்பண்ணையில் நல்வாழ்விற்கான விதைகளை விதைத்தோம். இது தமிழ் மண்ணின் எதிர்காலத்தை மாற்றியெழுதும் முயற்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தருணம் காவேரி வளையம் முழுவதையும் மீண்டும் காடுகளாக்கும்,. அந்தக் காடுகள் காவேரி மண்ணை காக்கும். அந்தக் காடுகள் முகிலைப் பார்த்தாலே மழை கொட்டும். மீண்டும் காவேரி நடப்பாள், பழைய கம்பீரத்தோடு!

(காவேரி கூக்குரல் ஒலிக்கும்)

விளம்பர பகுதி

திங்கள், 23 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon