�குடுகுடுப்பைக்காரன், திண்ணைப் பேச்சு :திமுக-அதிமுக விறுவிறு வாக்குசேகரிப்பு!

public

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வீசிய தேர்தல் காற்று, அதேவேகத்தில் தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல்பறக்க வீசிக்கொண்டிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அந்தந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் சிலர் நூதனமான முறைகளில் வாக்குசேகரித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் வேட்பாளர் புகழேந்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதே போன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கானை பகுதியில் திமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவிந்தன், குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு வீதி வீதியாகச் சென்று வீட்டு வாசலில் குடுகுடுப்பை அடித்து நூதன முறையில் திமுகவுக்காக வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கோவிந்தன் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கோவிந்தனின் இந்த நூதன முறை பிரச்சாரம் மக்களை ரசிக்க வைப்பதோடு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்து தருமாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விக்கிரவாண்டி தொகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நாங்குநேரித் தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட தளவாய்புரத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்துவருகிறார்.

எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் வேட்பாளர்களும், கட்சியின் மற்ற முக்கிய பிரதிநிதிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *