மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

விக்கிரவாண்டி: திமுக பிரச்சாரத்தில் குறையும் விசிக கொடிகள்!

விக்கிரவாண்டி: திமுக பிரச்சாரத்தில் குறையும் விசிக கொடிகள்!

இடைத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி ஒவ்வொரு நாளும் பரபரப்பைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக நிர்வாகிகள் மீது திமுகவினர் ஒரு கண் வைத்திருப்பதையும், விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உத்தரவின் பேரில் அதிமுக நிர்வாகிகள் வலைவிரித்துப் பேசிவருவதையும் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் விக்கிரவாண்டி: விசிகவைக் குறிவைக்கும் அதிமுக, பாமகவை குறிவைக்கும் திமுக! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

அந்தச் செய்தியில், “விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாமகவின் வன்னியர் வாக்குகளையும், அக்கட்சி முக்கிய நிர்வாகிகளின் குடும்ப வாக்குகளையும் திமுகவினர் பேசி வேட்டையாடிவருகின்றனர். இதையறிந்த அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன், திமுக கூட்டணியில் உள்ள விசிகவின் பட்டியலின வாக்குகளை கைப்பற்ற கடந்த மூன்று நாட்களாக பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறார். பணம் இப்பகுதிகளில் தாராளமாக புழங்க ஆரம்பித்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தோம்.

வெளியே ஒரு கூட்டணி உள்ளே ஒரு கூட்டணி என்று இந்த இடைத்தேர்தல் அதிமுக, திமுக இரு தரப்புக்கும் வித்தியாசமான உள்குத்து வைபவங்களை அரங்கேற்றி வருகிறது. இதில் அதிமுகவை விட அதிகம் பாதிக்கப்படுவது திமுகதான்.

ஏனெனில் பாமகவினரை திமுகவினர் பெரிதாக வளைக்க முடியாத நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தை கீழ் மட்ட நிர்வாகிகளை அதிமுக சுமுகமாக பேசி முடித்துவிட்டது என்று திமுக தலைவருக்கு புகார்கள் சென்றிருக்கின்றன.

விக்கிரவாண்டியில் களப்பணியாற்றி வரும் சில திமுக நிர்வாகிகள் இதுபற்றி மின்னம்பலத்திடம் பேசுகையில், “விழுப்புரம் எம்பி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது பொறுப்பாளராக இருந்தவர் இப்போதைய வேட்பாளர் புகழேந்தி. அதனால் விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் நன்றிக்கடனை இந்த இடைத் தேர்தலில் காண்பித்து புகழேந்தியை வெற்றிபெற வைப்போம் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரும் சிந்தனைச் செல்வனும் பேசினார்கள்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அமைச்சர் சி.வி. சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து லோக்கல் விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகளிடம் பேசிவிட்டனர். ‘ஒன்றரை வருஷம் எம்.எல்.ஏ.வா இருந்தாலும் பொன்முடியின் கைக்குள்ளதான் புகழேந்தி இருப்பார். அவரால திமுகவினருக்கே ஒண்ணும் செய்ய முடியாது. அதனால, உங்களுக்கு என்ன வேணும்னு இப்ப சொல்லுங்க. எல்லாமே செய்யுறோம்’ என்று சொல்லி சிறுத்தை நிர்வாகிகளை வளைத்திருக்கிறார்கள் அதிமுக தரப்பினர்.

இதன் காரணமாக திமுகவினரின் பிரசாரத்தில் இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கொடிகளை அதிகம் காண முடியவில்லை. அதிமுகவினருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படி விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் திமுகவுக்காக பிரசாரம் மேற்கொள்ளும்போது கொடிகளை எடுத்துச் செல்வதில்லை. கொடியோடு சென்றால், லோக்கல் அதிமுகவினரின் கண்ணில் பட்டால் தர்மசங்கடமாகிவிடுமே என்ற எச்சரிக்கை உணர்வு வேறு. சில பகுதிகளில் அதிமுகவினரே, ‘திமுககாரங்களோட போங்க.ஆனா கட்சிக் கொடிகளை பயன்படுத்தாதீங்க’ என்று சுதந்திரம் கொடுத்திருப்பதால் சிறுத்தைகள் திமுகவினருடன் தேர்தல் பணிகளுக்குச் சென்றாலும் கூட கட்சிக் கொடிகளை கழற்றி விடுகிறார்கள். எந்தெந்த பகுதிகளில் இதுபோல நடக்கிறது என்பது பற்றியெல்லாம் திமுக தலைவருக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுவிட்டன. இதுகுறித்து திமுக தலைவர் விடுதலைச் சிறுத்தைகளோடு பேசினால் நிலைமை சீராக வாய்ப்புள்ளது. இல்லையென்றால் சிறுத்தைகளின் உழைப்போ அல்லது உழைக்காமல் இருப்பதற்கான பலனோ அதிமுகவுக்குதான் செல்லும்” என்கிறார்கள் விக்கிரவாண்டி களத்தில் இருக்கும் திமுக நிர்வாகிகள்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon