மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் 12 சதவீதம் அகவிலைப்படி பெற்றுவந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக மத்திய அரசு இன்று(அக்டோபர் 9) அகவிலைப்படியை அதிகபட்சமாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் ஆகியவை இந்த ஆண்டு ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மட்டுமே அகவிலைப்படி உயர்த்தப்படும். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 5 சதவீதம் வரை ஒரே நேரத்தில் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும். 2019 ஜனவரியில் தொடங்கி, முந்தைய 9 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அகவிலைப்படியை அரசாங்கம் உயர்த்தியது.

இந்த முடிவால் மத்திய அரசின் 62 லட்சம் ஓய்வூதியதாரர்கள், 50 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். தீபாவளி நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்தை அளிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தை முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

பிரகாஷ் ஜவடேகர் மற்றொரு அறிவிப்பில், அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு ஊதியத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து, 2,000ரூபாயாக உயர்த்தியிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon