மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

பயம், பீதி... பதற்றத்தில் மாணவர்கள்!

பயம், பீதி... பதற்றத்தில் மாணவர்கள்!

பேராசிரியர் நா.மணி, ஈரோடு கலைக் கல்லூரி, ஈரோடு

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது சோளகனை பழங்குடி கிராமம். 12 மணிக்குப் பேருந்தை விட்டு இறங்கி, சுமார் 5.30 மணிக்கு அங்கு சென்று சேர்ந்தோம். இரவு தங்கி மறுநாள் காலை பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். மாணவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘படித்து முடித்து என்னவாக வர வேண்டும் என்பது உன் ஆசை?’ என்ற கேள்விக்கு, ‘சமையற்காரர் ஆக வேண்டும்’ எனப் பதில் வந்தது. இதைக் கேட்டு நாங்கள் அதிர்ந்து விட்டோம். நாங்கள் சந்தித்த 17 பேர்களில் 5 பேர் இதே பதிலையே சொன்னார்கள். பேருந்தைக்கூடப் பார்த்திராத மாணவர்கள் பலர் இருந்தனர். ஈராசிரியர்கள் பணிபுரியும் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கள் வீட்டைக் காட்டிலும் நல்ல உணவு, பாதுகாப்பு மற்றும் கற்றல் கற்பித்தலில் அவ்வப்போது ஈடுபடும் சமையற்காரரின் வேலையே தங்கள் கனவுப் பணி ஆகிப்போனதில் வியப்பேதும் இல்லை. இத்தகைய சிறுவர்கள் இன்று பல மலைக் கிராமங்களிலிருந்து வந்து கல்லூரிப் படிப்பு படிக்கிறார்கள். நான் பணிபுரியும் இடத்தில் மட்டும் 10 பேர் படிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு இருந்திருந்தால் இத்தனை பேர் படித்து முன்னுக்கு வந்திருக்க முடியாது.

ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு ஒன்று உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகம், இந்த நிரந்தரக் குடியிருப்பை அவர்களுக்கு வழங்கியது. சுமார் 50 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் குடியிருப்புப் பகுதி அருகில் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் இருக்கிறது. சிறு வயதிலேயே ஊசி பாசி விற்க பெற்றோருடன் சென்று வருதலால் பள்ளி இடைவிலகல் இப்போதும் அதிகம். பள்ளிக்கு வருவதும் பணிக்குச் செல்வதுமான சிறுவர்கள் பலர் உள்ளனர். பெண் குழந்தைகளுக்கு மிக இளவயது திருமணமும் இங்கு அதிகம். கட்டாயத் தேர்ச்சி நடைமுறை இல்லாத காலத்தில் இதில் ஓரிருவர் தவிர வேறு யாரும் எட்டாம் வகுப்பில்கூட அடியெடுத்து வைக்கவில்லை. இப்போது சற்றேறக்குறைய எல்லாக் குழந்தைகளும் எட்டாம் வகுப்பை எட்டிப்பிடித்து விடுகிறது.

பெண் குழந்தைகளின் திருமணம் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு முடிக்கும் வரையேனும் தள்ளிப்போகிறது. ஒருவர் எம்சிஏ முடித்து கணினி மென்பொருளாளராகவும் உள்ளார். செவிலியர் பட்டயம் பெற்று பணியாற்றி வருகிறார் ஒருவர். இன்னும் சிலர் பன்னிரண்டாம் வகுப்பு தாண்டி சுயநிதி கல்லூரிகளில் படிக்கச் சேர்ந்து படிக்க முயற்சி செய்து பணம் கட்ட முடியாமல் பாதியில் இடை நிற்கிறார்கள்.

ஓர் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் ஒரு கணக்கெடுப்பு நடைபெற்றது. கணக்கெடுப்பில் கலந்துகொண்ட மாணவர்களில் 77 விழுக்காட்டினர் கிராமப்புறங்களிலிருந்து வருபவர்கள் 89 விழுக்காட்டினர் கிராம அரசுப் பள்ளி மாணவர்கள். 28 விழுக்காட்டினரது பெற்றோர் படிப்பறிவு அற்றவர்கள். இத்தகைய பெற்றோர்களுக்கு ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எந்தளவு உறுதுணையாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. கணக்குப் பாடம் சரியாக வராது என்று கலைப் பாடங்களுக்குக் கழுத்தைப் பிடித்து தள்ளிவிடப்பட்ட மாணவர்கள் பலர் வணிகவியல், பொருளாதாரம் என்பதான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து கல்லூரிகளில் படிக்கிறார்கள். இங்கு அவர்களுக்குக் கணக்கு கட்டாயப் பாடமாக உள்ளது. பத்தாம் வகுப்பில் வெறும் 35, 40 என மதிப்பெண் வாங்கியவர்கள் இப்போதோ 70, 80 என மதிப்பெண் அள்ளுகிறார்கள். இது எப்படி?

தேர்வு என்பதே மாணவர்களுக்கு அச்சம். ஒரு வகையான பீதி உணர்வு. இனம் புரியாத பதற்றம். மகிழ்வுடன் கற்றலை மனசாட்சி இன்றி கெடுப்பது தேர்வுகள். ஆண்டு முழுவதும் கற்றதைக் கடைசியாக இரண்டு மணி நேரத்துக்குள் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளுவது. இத்தகைய அறிவியல்பூர்வமற்ற தேர்வுகளைத் தடை செய்வதும் கட்டாயத் தேர்ச்சி நடைமுறையின் அடிப்படை அம்சங்களில் அடங்கும். மரபார்ந்த மனப்பாடத் தேர்வு முறை ஒழிய வேண்டும் எனில் அதற்கு மாற்று வேண்டும். அதுவே தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (சிசிஇ) அமலாக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இந்த சிசிஇ முறைக்கு மிகவும் இணக்கமான செயல்வழிக் கற்றல் உயிரோட்டமாக நடைமுறையில் இருந்திருக்க வேண்டும். இவையெல்லாம் இப்போது, “இருக்கு ஆனா இல்ல” என்பதாக மாறிவிட்டது.

யார் காரணம் இதற்கு? சிசிஇ முறையும் செயல்வழிக் கற்றலும் நடைமுறைக்கு வராமைக்கு என்ன காரணம்? இப்போது இருப்பது போல் இன்னும் ஒரு மடங்கு ஆசிரியர்களாவது வேண்டும். அப்படி அதிகரிக்க செய்து கற்றல் கற்பித்தலில் உள்ள குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உபரி என்று அறிவித்திருப்பது எதைக் காட்டுகிறது ?

கட்டாயத் தேர்ச்சி நடைமுறை இருப்பின் மாணவர்களுக்குக் கடின உழைப்பு மனப்பான்மை போய்விடும் என்று எந்த ஆய்வு கூறியது? குழந்தையின் பார்வையில் எல்லாம் கற்றல் செயல்பாடுகள்தான். பள்ளிக் கல்வியிலும் இப்படி கற்றல் இயல்பாக நடைபெற வழி அமைத்துக் கொடுப்பதே அரசின் கடமை. சமூகத்தின் கடமையும் ஆகும். கட்டாயத் தேர்ச்சி ஆசிரியர்களின் பொறுப்புணர்வை மழுங்கடித்துவிட்டதாம். ஆண்டு முழுவதும் கற்றலும் கற்பித்தலும் கற்றுக் கொண்டதை சோதித்துப் பார்த்தலும் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு கற்றல் கற்பித்தல் முறையைக் கைவிட்டது யாருடைய குற்றம்? கட்டாயத் தேர்ச்சி என்பதைக் கட்டாயம் படிக்க தேவையில்லை, சொல்லித் தர வேலையில்லை என்று புரிந்துகொண்டது எப்போது? இந்த ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் பொதுத் தேர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது. இனி என்ன நடக்கும்? ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இனி மூன்றாம் வகுப்பு முதலே சிறப்பு வகுப்புகள் தொடங்கும். அரைகுறையாக விளையாடக் கிடைத்த வாய்ப்பும் அருகிப் போய்விடும்.

ஐந்தாம் வகுப்பு முதலே இவையெல்லாம் முழுத் தேர்ச்சி பள்ளிகள் என்ற அறிவிப்புப் பலகைகள், விளம்பரங்கள் ஆளுயர தட்டிகள் ஆங்காங்கே காணக் கிடைக்கும். ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று காட்டிக்கொள்ள நான்காம் வகுப்பில் அல்லது மூன்றாம் வகுப்பில்கூட பள்ளியை விட்டு துரத்துவது இயல்பாக நடக்கும். குழந்தைகளுக்கான கோனார் நோட்ஸ் கொடிகட்டிப் பறக்கும். ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வினா வங்கிகள் பிரபலமாகலாம். ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் வெளியாகி அசிங்கப்பட்டு நிற்கும் நிலைகூட வரலாம். தரவரிசை பட்டியல் சட்டபூர்வமாக இல்லாமல் நடைமுறைக்கு வரலாம். நிச்சயமாக இதை மிக மதிப்பு என்று சொல்லிவிட முடியாது. தேர்வு அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலைகள் அதிகரிக்கலாம். கவுன்சிலிங் மையங்கள் பெருக்கெடுக்கும். நடுத்தர வர்க்கத்தினர் உயர்வருவாய் பிரிவினர் பிள்ளைகள் இப்படி உருமாற்றம் அடையவே ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பயன்படும்.

ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் எட்டாம் வகுப்பு தொடுவது கணிசமாகக் குறைந்து விடும். பழங்குடியினர், விளிம்பு நிலை மக்கள் ஆகியோரின் பிள்ளைகள் எட்டாம் வகுப்பை எட்டிப் பிடிப்பதே கணிசமாகக் குறையும். எட்டாம் வகுப்பு வயதில் கைக்குழந்தையுடன் பல பெண் குழந்தைகள் அலைந்து கொண்டு திரியும். எட்டு, பத்து படித்து என ஏதேனும் ஒரு தொழில் செய்து பிழைப்பதெல்லாம் இனி நடைமுறை சாத்தியம் இல்லை. கல்லூரிக் கனவுகள்கூட பலருக்குத் தகர்ந்து போகும். இத்தனையும் தியாகம் செய்து பெறப்படும் திறன் அடிப்படையில் தேர்வானவர்கள் என்ன செய்வார்கள் என்பதும் வளமையான சிந்தனைக்குத் தீனி போடும் செயல்தான். தென்மாநிலங்களில் யாதொன்றும் நமது மாநிலத்தைப் போல மத்திய அரசின் சுற்றறிக்கையைக் கண்டதும் பதறியடித்துக்கொண்டு கட்டாய தேர்ச்சி முறையைக் கைகழுவி விட்டதாகத் தெரியவில்லை. கேரளத்தினர், கட்டாயத் தேர்ச்சி நடைமுறையை நாங்கள் கைவிட மாட்டோம் என்று கூறினர். கேரள மாநில அரசு கேப் கமிட்டி கூட்டத்திலேயே இதைக் கூறி விட்டதாகத் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் முந்தைய அரசு இருந்தபோதே பள்ளிக் கல்வி தொடர்புடையோர் கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்டது. கருத்துகளின் அடிப்படையில் கட்டாயத் தேர்ச்சி முறையைக் கைவிட மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். கல்வி வாய்ப்புகள், கல்வித் தரம், கல்வியில் சமத்துவம் என்ற முப்பரிமாணத்தில் மற்ற இரண்டையும் பாராமல் தரத்தை மட்டுமே பேசிக் கொண்டு கல்வி வாய்ப்புகளைத் தர மறுப்பதும், கல்வியில் சமத்துவத்தைச் சமைக்க மறுப்பதும் ஒட்டுமொத்த கல்வியையும் பாதிக்கும் என்பதையும் அரசு உணர வேண்டும்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon