மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

அசுரன்: வசனம் மாறினாலும் வரவேற்பு மாறவில்லை!

அசுரன்: வசனம் மாறினாலும் வரவேற்பு மாறவில்லை!

யாரைப் பாராட்டுவது என்றே தெரியாமல் மிகப்பெரிய பட்டியல் ஒன்றை எழுதி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள். காரணம், அசுரன் திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் பங்களிப்பு ஏற்படுத்திய தாக்கம்.

தனுஷை நடிப்பில் அசுரன் என்பதா, கதையைத் தேர்ந்தெடுப்பதில் அசுரன் என்பதா எனத் தெரியாமல், அசுரன் என்ற வார்த்தையையே நல்லவர்களைக் குறிக்கும் பெயராக மாற்றி தனுஷையும், மற்ற நடிகர்களையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அதேசமயம், அசுரன் திரைப்படத்தின் வசனத்தை மாற்றவேண்டும் என்று முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை நீக்கியிருக்கிறார் அசுரன் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்.

அசுரனின் முக்கியமான இடத்தில் வரும் ‘ஆண்ட பரம்பரை’ என்ற வசனத்தை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பீப் சவுண்டை சேர்த்திருக்கின்றனர். அந்தக் காட்சியை, அசுரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் இன்று காலை முதல் சேர்த்துவிட்டார் வெற்றிமாறன்.

ஐரோப்பிய நகரங்களிலும் ரிலீஸான அசுரன் திரைப்படம், முதல் இரண்டு நாட்களில் ஒன்றே கால் கோடி ரூபாய் வசூல் செய்து, இதற்கு முன்பு விஸ்வாசம் திரைப்படம் அதே இரண்டு நாட்களில் வசூல் செய்த ஒரு கோடி ரூபாய் என்ற ரெக்கார்டை பிரேக் செய்தது.

கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் கபாலி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் அசுரன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தனது வாழ்த்தினை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அதில் "தமிழ்த்திரையில் அசுரன்கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன், தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

புதன், 9 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon