மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று (அக்டோபர் 10) முதல் நீக்கப்படுகிறது.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இதையடுத்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த காஷ்மீர் இன்னும் முழுமையாக அதன் பிடியிலிருந்து மீளவில்லை.

காஷ்மீர் தலைவர்கள் வீட்டுக் காவலில் உள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் பாதுகாப்புக்காக, காஷ்மீரிலிருந்த அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். காஷ்மீருக்குச் செல்ல வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருந்தது. சிறப்பு அந்தஸ்து அறிவிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்கள் உட்பட 150 பேர் மட்டுமே காஷ்மீருக்குச் சென்று வந்தனர்.

கடந்த இரு மாதங்களாகக் காஷ்மீரில் இருக்கும் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்குச் சுற்றுலாப் பயணிகள் வர விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். ஜம்மு காஷ்மீர் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த தடையைத் திரும்பப்பெறவும் வலியுறுத்தியிருந்தார். இந்த நடைமுறை இன்று முதல் (அக்டோபர் 10) அமலுக்கு வருகிறது.

காஷ்மீரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர ஆளுநர் முயற்சி செய்து வருவதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்தனர். சுற்றுலாவை நம்பியிருந்த தொழில்கள் பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

.

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon