மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஜியோவும், முகேஷ் அம்பானியும் தடுக்க முடியாதவர்கள்!

ஜியோவும், முகேஷ் அம்பானியும் தடுக்க முடியாதவர்கள்!

ஐயா முகேஷ் அம்பானி,

இங்கு அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலமா?

நீங்கள் நலமாகவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக உங்கள் தம்பியின் நலத்தை அறியவே ஆவலாக இருக்கிறேன். அவர் தான் அனில் அம்பானி, எப்படி இருக்கிறார்?

அனில் அம்பானியின் டெலிகாம் தொழில் சரிவர போகவில்லையே இப்போது எப்படி இருக்கிறது?

மிகப்பெரிய நஷ்டத்தில் அவர் இருந்தபோது காப்பாற்ற நீங்கள்  வந்தீர்கள். அவர் ஜெயிலுக்குச் செல்லாமல் இருக்க மட்டும் தேவையான பணத்தைக் கொடுத்து உதவியதுடன், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் டவர்களை வாங்கிக்கொண்டு உங்கள் தொழிலை விஸ்தரிக்கத் தொடங்கினீர்கள். இப்படித்தான் உங்களது ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளிலேயே இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக மாறியது. 

2019ஆம் ஆண்டின் உங்களது டிஜிட்டல் டெலிகாம் தொழிலின் லாபத்தொகை மட்டும் 2,964 கோடிகள். 2018ஆம் ஆண்டு கிடைத்த 723 கோடியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபம் கிடைத்தாலும், 2019ஆம் ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் கிடைத்த லாபம் உங்களை சற்று ஆட்டிப்பார்த்திருக்கிறது.

2019ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் உங்களது லாபத்தொகை 831 கோடிகள். நான்காம் காலாண்டில் 840 கோடிகள். வெறும் 9 கோடிகள் மட்டுமே உயர்ந்திருக்கிறது. ‘வெறும்’ எனக் குறிப்பிட்டிருப்பதற்கு காரணம், 2018ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில்  மட்டும் 510 கோடிகள் லாபம் பார்த்த நீங்கள், 2019இன்  மூன்று மடங்கு லாபக் கணக்குப்படி 1500 கோடிகளையாவது 2019இன் கடைசி காலாண்டில் கடந்திருக்க வேண்டும். அது முடியாமல் போனதால், இலவச இண்டர்நெட் என நம்பி வந்த மக்களின் தலையிலேயே கையை வைத்திருக்கிறீர்களே இது நியாயமா? 

பிசினஸ் என்று வந்தபிறகு நியாயம்-அநியாயம் பார்க்க முடியாது என நீங்கள் சொல்லலாம். அதை அப்படி நேரடியாக சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், டிராய் விலையை குறைத்ததால் வேறு வழியில்லாமல் ஒரு நிமிடத்துக்கு ‘6 பைசா’ என வேறு நெட்வொர்க்கில் உள்ள நம்(ண்)பர்களை தொடர்பு கொள்ள சார்ஜ் செய்யப்போவதாக போலிக் கண்ணீர் வடிக்கிறீர்களே, இது தகுமா?

நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?

“வெவ்வேறு நெட்வொர்க்கில் உள்ள எண்களுக்கு என் வாடிக்கையாளர்கள் ஃபோன் செய்வதால், அவர்களது நெட்வொர்க்கை நான் பயன்படுத்த நேரிடுகிறது. இதற்காக செலவிடும் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால், வாடிக்கையாளர்களும் இந்த சுமையை ஏற்றுக்கொள்ளவேண்டும்” எனக் கேட்டிருக்கிறீர்கள். 

அப்படி மற்ற நெட்வொர்க்குகளை பயன்படுத்தியதற்கான நீங்கள் கடந்த மூன்று வருடத்தில் ஏர்டெல் நிறுவனத்துக்கும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கும் கட்டியிருக்கும் தொகை 13,500 கோடிகள். ஒரு வருடத்துக்கு 4500 கோடிகள் எனக் கொடுத்திருக்கிறீர்கள். அதேசமயம், ஒவ்வொரு வருடமும் லாபம் பார்த்து, அதிக வாடிக்கையாளர்களை மற்ற நெட்வொர்க்குகளிடமிருந்து மாற்றி. இன்று 30.67 கோடி வாடிக்கையாளர்களுடன் நம்பர் 1 இடத்தில் இருக்கிறீர்கள். 

இன்று உங்கள் நிறுவனம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் மற்ற நெட்வொர்க்குகளிலிருந்து ஜியோவுக்கு வந்த வாடிக்கையாளர்கள் கொடுத்ததல்லவா? அவர்களுக்கு சிம் கார்டையும், அதற்கான மொபைல் ஃபோனையும் கொடுத்துவிட்டு அதில் பல நிறுவனங்களின் விளம்பரங்களையும் இடம்பெற வைத்தீர்கள் அல்லவா? 30 கோடி பேருக்கு ஒரே சமயத்தில் ஒரு தகவலை அனுப்பிவிடக்கூடிய சக்தியை பணமாக மாற்றினீர்கள் அல்லவா? அதற்காகவாவது அந்த 6 பைசாவை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாமே!

ஒரு நெட்வொர்க்கிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு ஃபோன் செய்ய 14 பைசா என்றிருந்த விலையை 6 பைசா என டிராய் அறிவித்தது. அதேநேரம், 2020இன் முடிவில் இந்த 6 பைசாவும் இருக்காது என்றும் அறிவித்தது. ஒரு வருடம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்த 6 பைசாவை வாங்கி உங்கள் நிறுவனத்தை முதலிடத்திலிருந்து எங்கே கொண்டு செல்லப்போகிறீர்கள்?

மற்ற நெட்வொர்க்கிலிருந்து பேசினால் தான் 6 பைசா கொடுக்கவேண்டும். ஜியோ-டூ-ஜியோ ஃப்ரீ என்று சொல்லிவிட்டு, ‘இலவச சேவையைப் பெற உங்கள் மற்ற நண்பர்களையும் ஜியோ குடும்பத்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர்களை நாங்கள் ஏன் அழைத்து வரவேண்டும். நீங்கள் நினைத்தாலே முடியுமே! நாட்டின் பிரதமரையே உங்களது நிறுவன விளம்பரத்தில் இடம்பெறச் செய்த உங்களுக்கு, ஆதார் கார்டுடன் ஜியோ எண்ணை இணைத்தால் தான் ஃபோன் செய்ய முடியும் என்று ஒரு ஆர்டரைப் போட்டுவிட்டால் மொத்த 133 கோடி இந்தியர்களும் ஜியோவுக்குள் வந்துவிடப்போகிறார்கள். அதை விட்டுவிட்டு எங்களிடம் போய் கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே! 

எப்படி பெட்ரோலியத் துறையில் புகுந்து  ஒரு அசாதாரண சூழலை உருவாக்கி, மக்கள் நலனை கவனிக்காமல் அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான லாப விலையில் பெட்ரோலை விற்கும் சூழலை உருவாக்கினீர்களோ, அதேபோல இப்போது டெலிகாம் துறையையும் மாற்றிவிடலாம். கடந்த 14 வருடங்களில் முதல் முறையாக தனது நஷ்டக் கணக்கை வெளியிடும் நிலைக்கு ஏர்டெல் நிறுவனத்தை தள்ளிவிட்டீர்கள். இப்போது, வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் இணைக்கபட்டுவிட்டன. எதிரே நிற்பவர்கள் மூவரிலிருந்து இரண்டாக மாறிவிட்டனர். இது தான் சரியான தருணம். இலவசம் என்ற சொல்லுக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய பலமே இதுதான். மக்களின் பலவீனமும் இதுதான். இப்போது இருக்கும் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களும் பெரிய நஷ்டத்திற்கு ஆளாகிவிட்டால் போட்டிக்கு ஆளே இருக்கமாட்டார்கள். அப்போது, இந்தியாவின் ஒவ்வொரு மாநில அரசாங்கங்களும் வேண்டுமென்றால் தனி டெலிகாம் நிறுவனங்களை அரசு சார்பில் உருவாக்கமுடியும். ஆனால், அப்போதும் நீங்கள் தான் மேலே இருப்பீர்கள். காரணம், பிரதமரே உங்கள் நிறுவன விளம்பரத்தில் இடம்பெறுவார் அல்லவா?

30 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதால், மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு 13,500 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதிருந்தது. இந்த நிலை மாறி எப்போது நீங்கள் மற்ற நிறுவனங்களுடன் பரஸ்பர ஒப்பந்தத்துக்குள் சென்று, ஒரே மாதிரியான விலையை டெலிகாம் துறைக்குள் கொண்டுவருகிறீர்களோ, அப்போதே உங்கள் ஜியோவின் கதை தெரிந்துவிடும். அதுவரை, இதழோரத்தில் நீங்கள் உதிர்க்கும் கோர சிரிப்பு தொடரட்டும். 

-ஸ்பிளாக்கர்.

வியாழன், 10 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon