மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

மாணவிக்கு பாஜக பிரமுகர் வன்கொடுமை: இன்னும் எத்தனை பேர்?

மாணவிக்கு பாஜக பிரமுகர் வன்கொடுமை: இன்னும் எத்தனை பேர்?

பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில் சிவகங்கையில் நர்ஸிங் கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்ததாக பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருக்குச் சொந்தமான கல்லூரியில் படித்த மாணவியை அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி மாணவியிடம் அத்துமீறி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சிவகங்கையைச் சேர்ந்த, 19 வயது இளம் பெண் ஒருவருக்கும், சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. புதுப்பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு மாப்பிள்ளை வீட்டார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் அப்பெண் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது.

திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் அப்பெண் 4 மாத கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், இதுகுறித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சிவகங்கையில் மதுரை விலக்கு சாலையில் குட்மேனஸ் என்ற தனியார் நா்சிங் கல்லூரி உள்ளது. அக்கல்லூரியின் தாளாளர், பாஜகவின் சிவகங்கை மாவட்ட கலை, கலாச்சார பிரிவு தலைவர் சிவகுரு துரைராஜ் ஆவார். இவர், அந்த மாணவியிடம் தனக்கு சாதகமாக நடந்துகொண்டால் அதிகமாக உள்ளீட்டு மதிப்பெண் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து வெளியே கூறினால் அப்பெண்ணைக் கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் யாரிடமும் தெரிவிக்காமலிருந்து வந்துள்ளார்.

மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிந்த பிறகு, இதுகுறித்து சிவகங்கை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜை போலீஸார் நேற்று (அக்டோபர் 10) மாலை கைது செய்தனர். இவ்விவகாரம் குறித்துச் சார் ஆய்வாளர் பிரபா, மற்றும் டவுன் காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, இவருக்குச் சொந்தமான தனியார் கல்லூரியில் மேலும் சில மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்துள்ள போலீசார் அதனடிப்படையிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் போலீசிடம் ரகசியமாகப் புகார் தெரிவிக்கலாம் என்றும், மாணவிகளின் விவரங்கள் வெளியே தெரிவிக்கப்படாது என்றும் ஆய்வாளர் மோகன் கூறியுள்ளார்.

உன்னாவ் வழக்கைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா, தனது சட்டக் கல்லூரியில் படித்த மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழலில் தற்போது தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளி, 11 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon