அதிகாரிகள் ஆதரவுடன் நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் எடப்பாடி

public

அமைச்சர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளை அதிகாரிகள் மூலமாக சமாதானபடுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகளை கண்டுகொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது. இதனால், பல மாவட்ட நிர்வாகிகளும் தங்கள் பகுதி அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தியில் இருந்துவந்தனர்.

இந்த நிலையில்தான் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளையும் தமிழக தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நேரத்தில் கீழ்மட்ட நிர்வாகிகள் களையிழந்து இருந்தால் தேர்தல் பணிகள் சுணங்கிப் போகும் என்று கருதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளை சமாதானம் செய்துவருகிறார்.

இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் பேசினோம்…

தமிழகம் முழுவதும் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் உள்ளன. இதேபோல, 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12,524 ஊராட்சிகளும் உள்ளாட்சி அமைப்புகளில் அடங்கும். அதில், ஒன்றிய அளவில் அதிமுக கட்சி ரீதியாக இரண்டாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கவனிக்கவில்லை என்ற நிர்வாகிகளின் புகாரை கவனத்தில் எடுத்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது எண்ணத்தை அதிகாரிகள் மூலமாக செயல்படுத்தியுள்ளார்.

அண்மையில், உள்ளாட்சி அமைப்புகளை கவனித்து வரும் அதிகாரிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் மூலமாக வாய்மொழியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார் எடப்பாடி. அதனை பின்பற்றி, தங்கள் பகுதியிலுள்ள ஒன்றியச் செயலாளர்களை அழைத்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள், முதலில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அளித்துள்ளனர். அத்துடன் ஒன்றியத்திலுள்ள அரசு பணிகள் சிலவும் அதிமுக ஒன்றியச் செயலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோலவே நடைபெற்றுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர், அதிகாரிகளிடம் கோபப்பட்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களான எங்களிடம் வாக்காளர் பட்டியலை அளிக்காமல் நீங்கள் எப்படி ஒன்றியச் செயலாளரிடம் அளிப்பீர்கள் என்று அதிகாரிகளோடு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால் அதற்கான செலவுகளை சமாளிக்கவும், அதே நேரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளை சமரசப்படுத்தவும் இவ்வாறான திட்டத்தை கையாண்டிருக்கிறார் எடப்பாடி என்று கூறுகிறார்கள் அதிமுகவினர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *