^அதிமுகவில் சசிகலா இணைவாரா? தினகரன்

public

அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக உருவாக்கப்பட்டிருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அமமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். இதனையடுத்து, அமமுகவுக்குப் புத்துயிரூட்டுவதற்காக அமமுக பொதுச் செயலாளர் தினகரன், மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிவருகிறார்.

அந்த வகையில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 13) குன்னத்தூர் சங்கர் மஹாலில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்த தினகரனுக்கு செண்டை மேளம் முழங்க, அமமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் பேசிய தினகரன், “ஜெயலலிதா மறைந்த பிறகு சிறு சலசலப்புக்குக் கூட இடமில்லாமல் சசிகலாவால் இந்த ஆட்சி உருவாக்கப்பட்டது. தற்போது சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இந்த ஆட்சியாளர்கள் எந்த அளவு நன்றியுடன் இருக்கிறார்கள் பாருங்கள். ஆட்சியில் இருப்பதால்தான் அதிமுக என்ற கட்சியே இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். துரோகத்தை வென்று ஜெயலலிதாவின் உண்மையான இயக்கத்தை மீட்டெடுக்க உருவாகியிருப்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என்று தெரிவித்தார்.

**உள்ளாட்சித் தேர்தலில் போட்டி**

அமமுகவைப் பதிவு செய்வது தொடர்பான விவகாரம் வரும் 17ஆம் தேதி வரவுள்ளது. விரைவில் அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்வோம். நிரந்தர சின்னம் கிடைத்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று குறிப்பிட்ட தினகரன், “சசிகலா சிறையிலிருந்து வந்ததும் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கிவிடுவோம் எனவும் தினகரனைச் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றும் ஒரு பொய் பிரச்சாரம் பரவிவருகிறது. ஏனெனில், தினகரன் என்றால் அவர்களுக்குப் பயம். சசிகலா சிறையில் இருப்பதால் அவருடன் பகை இல்லை என்று கூறுகிறார்கள் போல. இந்த சசிகலா சிறையில் இருக்கும் மூன்று ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் யாரேனும் போய் பார்த்தார்களா? நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவாவது வந்தார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

**அதிமுகவை மீட்டெடுப்பதுதான் இலக்கு**

மேலும், “அமமுக தொண்டர்களைக் குழப்பி அதிமுகவில் இணைக்கவே இவ்வாறான செய்திகள் பரப்பப்படுகிறது. எங்களையும், ஜெயலலிதாவின் தொண்டர்களையும் அவமதித்தவர்களுடன் சசிகலா எப்படிச் சேருவார்? எப்படி நாம் சேருவோம்? அதிமுகவுடன் நாங்கள் இணைய விண்ணப்பம் அளித்ததுபோல ‘தினகரன் அணியுடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை’ என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். அதிமுகவுடன் நாங்கள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. அதிமுகவை மீட்டெடுப்பதுதான் அமமுகவின் இலக்கு” என்று தெரிவித்தார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *