மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

விஜய் ரசிகர்கள் உருவாக்கிய ‘காப்பான்’!

விஜய் ரசிகர்கள் உருவாக்கிய ‘காப்பான்’!

சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்து மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்தச் சம்பவத்தைப் பற்றி விஜய் பேசியது அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், தங்களுக்குப் பிடித்த நடிகரான விஜய் சொன்னவற்றை நாங்கள் எளிதாகக் கடந்து வந்துவிட மாட்டோம் என்று நிரூபிக்கும் வகையில் ஒரு செயலை செய்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

சமீபத்தில் ‘காப்பான்’ திரைப்படம் வெளியானபோது சூர்யாவின் ரசிகர்கள் பேனர் வைக்கும் செலவில் இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கினர். அதேபோல ‘அசுரன்’ திரைப்படம் வெளியானபோது தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தனர். தற்போது அதே வழியை விஜய் ரசிகர்களும் பின்பற்றியுள்ளனர்.

பேனர், கட் அவுட் போன்றவை வைப்பதற்கு ஆகும் பணத்தில் 12 சிசிடிவி கேமராக்களை விஜய் ரசிகர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டத் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் கூறும்போது, “கட் அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்குப் பதிலாக சமுதாயத்துக்குப் பயனளிக்கும் வகையில், ஏதேனும் செய்ய வேண்டும் என விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகள் என்னை அணுகினர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்பவும், காவல் துறை ஆலோசனைப்படியும், நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட நான்கு இடங்களில் சிசிடிவி மற்றும் மானிட்டர் அமைத்துக் கொடுத்துள்ளனர்” என்றார். மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

சிசிடிவி கேமரா அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெல்லை காவல் துறை ஆணையர் சரவணன் அவர்கள் உரையாற்றும்போது, “பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி அமைத்துக் கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்துக்கு நன்றி. நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். சிசிடிவி மூலம் தேவையற்ற பிரச்சினைகள் குறைந்து மாணவிகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியும். பெண் குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் காவல் துறையின் உதவி தேவைப்பட்டாலும் 1098 என்ற எண்ணை அழைக்கவும். உங்கள் பாதுகாப்பை சிசிடிவி உறுதி செய்வது போல உங்கள் பெற்றோரின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்ட வலியுறுத்துங்கள்” என்று கூறினார்.

விஜய்யின் பிகில் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்று விரும்பிய விஜய் ரசிகர்கள் சிலர், சமீபத்தில் மண்சோறு தின்று கடவுளிடம் வணங்கி தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனால், சமூக வலைதளங்களில் பெரும் கேளிக்கும் ஆளாக்கப்பட்டனர். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளினால் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டை போடுவதையும் தவிர்ப்பதற்காகவே, ‘நல்ல விஷயங்களுக்கு அதைப் பயன்படுத்துங்கள்’ என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், தங்களுடைய கட் அவுட் பணத்தையே இந்த ரசிகர்கள் சிசிடிவி கேமரா வைக்கப் பயன்படுத்தியது, இனிவரும் காலங்களில் பல நூறு பேருக்குப் பாதுகாப்பானதாக அமையும். மண் சோறு சாப்பிட்டு கடவுளிடம் வணங்குவதை விட, இப்படி சிசிடிவி கேமரா அமைத்தால் அதனால் பயன்பெறுபவர்கள் அனைவருக்கும் இந்த சிசிடிவி கேமராக்களே கடவுளாக மாறிவிடும்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon