மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 அக் 2019

அப்பா இல்லாம நான் ஒண்ணுமே இல்லை: துருவ் விக்ரம் நெகிழ்ச்சி!

அப்பா இல்லாம நான் ஒண்ணுமே இல்லை: துருவ் விக்ரம் நெகிழ்ச்சி!

துருவ் விக்ரம் நடித்து வெளியாகவிருக்கும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா அக்டோபர் 22ஆம் தேதி, சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள திரைப்படம் ஆதித்ய வர்மா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இந்தப் படம் மூலமாக கதாநாயகராக அறிமுகமாகிறார். கிரிசாயா இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பனிதா சந்து கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆதித்ய வர்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரைப்படப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா உரையாற்றும்போது ஆதித்ய வர்மா படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விக்ரம் எப்போதும் ஒரு உச்ச நட்சத்திரம் போல நடந்துகொள்ளவில்லை. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021ஆம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.

துருவ் விக்ரம் உரையாற்றும்போது, “நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உரைகளை வழங்கியிருந்தேன். ஆனால், இந்த விழா சற்றுக் கூடுதல் சிறப்புமிக்கது. காரணம், என் குடும்பமே இங்கு இருக்கிறது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்” என்று கூறினார். மேலும், இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தில் தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த படக்குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்தார். தொடர்ந்து தனது தந்தையைக் குறித்துக் கூறும்போது “அப்பாவுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தப் படத்துக்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவிகிதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும். அவர் இல்லாமல் நான் இல்லை” என்று கூறினார்.

நடிகர் விக்ரம், “துருவ்வைப் போல பேச எனக்குத் தெரியாது” என்று கூறி சிரித்தபடி பேசத் தொடங்கினார். தனது 12ஆம் வகுப்பு முடிவுகளுக்காகக் காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டுக்காகக் காத்திருக்கும்போதோ ஒருபோதும் பதற்றத்தை உணரவில்லை ஆனால், இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன் என்று கூறினார். “துருவ்வின் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கவும், அவர் செய்யப் போகும் தொழிலைத் தேர்வு செய்யவும் முழு சுதந்திரத்தையும் அவருக்கு அளித்திருந்தேன். ஆனால் அவர் திரைத்துறையைத் தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது” என்று அவர் தெரிவித்தார். இந்தப் படத்துக்குத் துருவை தேர்ந்தெடுத்ததற்கும் அவர் மீது நம்பிக்கை வைத்ததற்கும் படத்தின் தயாரிப்பாளரான முகேஷ் மேத்தாவுக்கு நன்றி தெரிவித்ததோடு படத்தின் இயக்குநர், இணை இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாநாயகிகள் என அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரைப்படத்தில் இடம்பெறும் முக்கிய வசனத்தைப் பேசுமாறு துருவ்விடம் விக்ரம் கேட்டுக்கொண்டார். துருவ் சற்று கூச்சப்பட்டவுடன் அவருக்கு உற்சாகமளித்து அவரை பேச வைத்ததுடன், இருவரும் இணைந்து சில பாடல் வரிகளையும் பாடி காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

புதன் 23 அக் 2019