மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 20 நவ 2019

கிச்சன் கீர்த்தனா: சேமியா இட்லி

கிச்சன் கீர்த்தனா: சேமியா இட்லி

பெரும்பாலும் மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுப்பொருட்கள் எண்ணெயில் பொரித்தவையாகவே இருக்கும். அவை கலோரிகளை அதிகரித்து உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கலாம். அப்படியில்லாமல் ஆரோக்கியம் தரக்கூடிய இந்த சேமியா இட்லியைச் செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்துக்கு அடிதளமிடுங்கள்.

என்ன தேவை?

சேமியா - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

துருவிய கேரட் - அரை கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்

தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

சமையல் சோடா - 2 சிட்டிகை

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு தாளித்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் ஊற்றி சேமியாவைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதனுடன் தயிர் மற்றும் உப்பு, சமையல் சோடா சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு இதனுடன் துருவிய கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் தாளித்து தனியாக வைத்துள்ள பொருட்களையும் இதனுடன் சேர்த்து, இட்லி மாவைவிடச் சற்று கெட்டியான பதத்துக்கு மாவைக் கலந்துகொள்ளவும். பிறகு மாவை இட்லிகளாக வார்த்தெடுக்கவும். தேங்காய்ச் சட்னி, அல்லது தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: பனீர் பிங்கர்ஸ்

புதன், 23 அக் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon