மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைத்தால் என்ன? அதிமுக கூட்டத்தில் ஷாக்

டிஜிட்டல் திண்ணை:  உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைத்தால் என்ன? அதிமுக கூட்டத்தில் ஷாக்

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

“உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது பற்றி அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று நவம்பர் ஆறாம் தேதி மாலை தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

வழக்கம்போல மேடையில் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மட்டுமே அமர்ந்திருந்தனர். முன்வரிசையில் அமைச்சர்கள், பின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என அரங்கு நிறைந்திருந்தது.

பெயர்தான் ஆலோசனைக் கூட்டம் ஆனால் வழக்கம்போல மேடையில் இருக்கும் ஐந்து பேரும் பேசி கூட்டத்தை முடித்து விட்டார்கள்.

கூட்டத்தை தொடங்கி வைத்த அவைத்தலைவர் மதுசூதனன், ’இடைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு நாம் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் நாம் முழு வெற்றி பெற வேண்டுமானால் ஒரு முக்கியமான கட்டுப்பாட்டை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குடும்ப அரசியலை உள்ளாட்சித் தேர்தலுக்கு கொண்டு வரக்கூடாது. அவரவர் வாரிசுகளை இந்த தேர்தலில் களமிறக்க கூடாது’ என்று ஒரு நிபந்தனையை விதித்தார்.

சென்னை மாநகர மேயர் பதவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் தன் மகன் ஜெயவர்தனைக் களமிறக்க காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். இது தெரிந்துதான் எடுத்த எடுப்பிலேயே குடும்பத்தை வைத்து தன் பேச்சில் ஜெயக்குமாருக்கு ஒரு இடி இடித்தார் மதுசூதனன்.

அதன்பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசும்போது வழக்கம்போல இடைத்தேர்தல் வெற்றியை புகழ்ந்து விட்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு எப்போதும் தயார், கூட்டணிக் கட்சிகள்தான் நம்மை அனுசரித்துச் செல்லவேண்டும். நாம் கூட்டணிக் கட்சிகளை அனுசரித்துச்செல்வது மாதிரி இருக்கக்கூடாது. இதுபற்றி தலைமை உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ‘மாவட்டச் செயலாளர்கள் தான் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்று பட்டியலைக் கொடுக்க போறீங்க. அதை கவனத்தோடு தயார் செய்யுங்கள். உங்களுக்கு உதவவும் நீங்கள் தப்பு செய்தால் கண்டுபிடிக்கவும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப் போறோம். மக்கள் செல்வாக்குள்ள அந்தந்தப் பகுதியில் ஜெயிக்க கூடிய வாய்ப்புள்ள நமது கட்சி பிரமுகர்களை தேடிப்பிடித்து வேட்பாளராக நிறுத்த வேண்டும். சும்மா நம்ம வண்டியில ஏறி வர்றாங்க, பின்னாடி நிக்கிறாங்கனு வேட்பாளராக தேர்ந்தெடுக்க கூடாது.

அதேபோல தோழமைக் கட்சிகளை நாம் அனுசரித்து போக வேண்டியிருக்கிறது. பல நெருக்கடிகள் நமக்கு இருக்கிறது அதை எல்லாம் தாண்டி இந்தத் தேர்தலில் நமது கூட்டணியும் நாமும் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் தான் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு எந்த கஷ்டத்தையும் மறந்து உள்ளாட்சித் தேர்தலில் நாம் உழைக்க வேண்டும்’ என்று பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், ‘இப்பவே மாவட்டங்களில் போய் ஒவ்வொரு பகுதியிலும் திறமையான வேட்பாளர்கள் மக்களுக்கு அறிமுகமான வேட்பாளர்கள் யார் என கண்டுபிடித்து, ஒருவேளை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டிக்கு வந்தால் உட்கார்ந்து பேசி அதிருப்தி என்பதை களைய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் என்பது கட்சி செல்வாக்கு மட்டுமல்ல தனிப்பட்ட செல்வாக்கும் சேர்த்தது தான். எனவே கீழ்மட்டத்தில் இருந்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அதை முதலில் எல்லாரும் செய்ய வேண்டும்’ என்று பேசினார்

கடைசியில் நன்றி உரையாற்ற துணை ஒருங்கிணைப்பாளர் மாநிலங்களவை எம்பி வைத்திலிங்கம் அழைக்கப்பட்டார். அவர் பேசுகையில், ‘இந்த தேர்தல்ல நம்ம பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கு. பெண்கள் இட ஒதுக்கீடு போக மிச்சமிருக்கிற இடங்கள்ல போட்டியிடுவதுல நமக்கே நிறைய போட்டிகள் இருக்கு. இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் போது இன்னும் பல சிக்கல்கள் வரும். நம்ம கட்சியிலேயே என் ஆதரவாளர் உன் ஆதரவாளர் என்ற பேச்சும் வரும். இதையெல்லாம் வச்சு என்னோட தனிப்பட்ட கருத்து என்னன்னு கேட்டா சட்டமன்ற தேர்தலில் நாம ஜெயிக்கணும்னா உள்ளாட்சித் தேர்தலை எப்பாடுபட்டாவது சட்டமன்ற தேர்தல் வரைக்கும் ஒத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலில் நமது கூட்டணி கட்சிகளுக்கும் நமக்கும் ஏற்படும் முரண்பாடுகளை எதிர்க்கட்சியினர் பெரிசாக்கி சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கு. இது என்னோட தனிப்பட்ட கருத்து என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

அவருக்குப் பிறகு யாருமே பேச வாய்ப்பு இல்லாததால் வைத்தியின் கோரிக்கைக்கு ஓபிஎஸ், எடப்பாடியின் பதில் என்னவென்றே தெரியவில்லை. இதனால் அதிமுக நிர்வாகிகள் குழப்பத்தோடுதான் கூட்டத்தை விட்டு வெளியே வந்தார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்

வியாழன், 7 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon