மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 பிப் 2020

பாஜகவுக்கு நான்கு பொறுப்புத் தலைவர்கள் ‘நியமிக்கப்பட்ட’ பின்னணி!

பாஜகவுக்கு நான்கு பொறுப்புத் தலைவர்கள் ‘நியமிக்கப்பட்ட’ பின்னணி!

தமிழக பாஜகவின் தலைவர் பதவி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் காலியாகவே இருக்கிறது. தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வந்த சில மணித்துளிகளிலேயே, தனது பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதையடுத்து செப்டம்பர், அக்டோபர் கடந்து இப்போது நவம்பர் 8 தேதிகள் ஆகியும் இதுவரை தமிழக பாஜக தலைவரை நியமிக்கவில்லை அக்கட்சியின் தேசியத் தலைமை. யாராவது ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அவரைப் பற்றி மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து புகார் சொல்வதும், பின் அதை தலைமை ஆறப்போடுவதுமாக விளையாட்டுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கிடையில் மகாராஷ்டிர அரசியலில் பாஜக ஆட்சி அமைக்க சிவசேனா தொந்தரவு கொடுத்து வந்ததால், தமிழகம் பக்கம் டெல்லி தலைமை கவனம் செலுத்தவில்லை.

இந்த நிலையில்தான் இன்று (நவம்பர் 8) பாஜகவின் தமிழக பொறுப்பாளரும் தேசியச் செயலாளருமான முரளிதர் ராவ் சென்னையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடந்தது.

ஒரு கூட்டம் நடந்தால் யாராவது ஒருவர் அந்நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க வேண்டுமல்லவா... அந்த அடிப்படையில் பாஜக துணைத் தலைவர் எம்.ஆர். காந்தியை இந்த நிகழ்ச்சிக்குத் ‘தலைமை’ வகிக்குமாறு கேட்டிருக்கிறார்கள். எனவே அவருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்திருக்கிறார்.

கூட்டத்தில் பேசியவர்கள், ‘நிகழ்ச்சியின் ‘தலைவர்’ அவர்களே... என்று விளிக்க ஒரு டிவி ஊடக பத்திரிகையாளர் இதைக் கேட்டு தன் அலுவலகத்துக்குச் சொல்லியிருக்கிறார். ‘சார் காந்திங்குறவரை தலைவர் அவர்களேனு சொல்றாங்க’ என்று கூற அப்படியா பாஜகவுக்கு தலைவர் பதவி போட்டாச்சா? விவரமா கேட்டு சீக்கிரம் சொல்லுங்க உடனே போடணும்’ என்று கேட்டிருக்கிறார் அலுவலகத்தில் இருந்த மூத்தப் பத்திரிகையாளர்.

இதையடுத்து அந்த டிவி நிருபர் விசாரிக்க, ’நிகழ்ச்சிக்கு நான்கு பேருமே தலைவர்கள்தான்’ என்று சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு நிருபர் உடனடியாக அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, ‘சார் பொறுப்புத் தலைவராஅ காந்தியை போட்டிருக்காங்க. பொன்னார், வானதி, இலகணேசனும் பொறுப்புத் தலைவர்களாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

அவ்வளவுதான பிரேக்கிங் நியூஸ் ஓடியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தலைவர்களே ஒருகணம் இதைப் பார்த்து லேசாக மயங்கி பின் உண்மை தெரியவரவும் விரக்தியாக சிரித்திருக்கிறார்கள்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon