ஸ்டாலின் பக்குவம்: மாஃபா வருத்தம்!

public

தனக்கு எதிரான திமுகவினரின் போராட்டத்தைக் கைவிடச் சொன்ன திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

மிசா சட்டத்தின்கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் சிறை சென்றது குறித்து கருத்து தெரிவித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லை என்றும், மேலும் சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார்.

இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, பல இடங்களில் அமைச்சருக்கு எதிராக இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றன. அதோடு சென்னை அண்ணா நகரில் அமைச்சரின் உருவப் பொம்மையையும் எரித்தனர். இதனால் அமைச்சர் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எனினும் அமைச்சருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிடும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 7) சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், “ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக நான் முதல்வரிடம் பேசி இருக்கிறேன். முதல்வரிடம் என்னுடைய பேச்சு குறித்து குறிப்பிட்டேன். எனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, பொது விஷயங்கள் குறித்து பேசும் அமைச்சர்கள் பலரின் கருத்துகள் சர்ச்சைக்குரிய வகையிலேயே இருந்துள்ளன. இதனால் பேட்டியளிக்க வேண்டாம் என்றும், அவசியம் ஏற்பட்டால் கவனத்துடன் பேசுங்கள் என்றும் சில அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்காதவர் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும்போதுகூட மிகுந்த கவனத்துடன் எதிரணியில் உள்ளவர்கள் மனம் புண்படாத வகையில் தெளிவாகத் தனது கருத்துகளை எடுத்துவைப்பவர். ஆனால், ஸ்டாலின் குறித்து அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள்தான் பிரச்சினைக்குக் காரணமாக மாறின. அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

எனினும் இந்த விவகாரத்தை பக்குவமாக கையாண்ட திமுக தலைவர் ஸ்டாலின், போராட்டத்தைத் தவிர்க்க கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இதுதொடர்பாக முதல்வரும் மாஃபா பாண்டியராஜனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இந்த நிலையில்தான் தனது கருத்து தொடர்பாக அவர் விளக்கம் அளித்ததோடு, ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *