மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

தென்னிந்திய நடிகர் சங்கம்: புதிய அதிகாரி நியமனம்!

தென்னிந்திய நடிகர் சங்கம்: புதிய அதிகாரி நியமனம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குச் சிறப்பு அதிகாரியாகப் பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை தமிழக அரசு நியமித்திருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022ஆம் ஆண்டுக்கான தேர்தல், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. பொதுச்செயலாளர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் விஷாலும், சங்கரதாஸ் அணி சார்பில் ஐசரி கணேஷும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதன் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில், ‘நடிகர் சங்கம் செயல்படவில்லை என அறிகிறோம், அதனால் ஏன் தனி அதிகாரி மூலமாக நிர்வகிக்கக் கூடாது’ என பதிவுத் துறை, நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இது தொடர்பான கடிதமும் நடிகர் சங்கத்தின் நோட்டீஸ் போர்டில் ஒட்டிப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகர் சங்க உறுப்பினர்கள், இந்த நோட்டீஸ் தொடர்பாக வழக்கு தொடர ஆயத்தமாகி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 7) பதிவுத் துறை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குச் சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது. பதிவுத் துறையில் உதவி ஐஜி ஆக இருந்துவரும் கீதா, நடிகர் சங்கத்துக்குச் சிறப்பு அதிகாரியாகச் செயல்படவுள்ளார். இந்த திடீர் அறிவிப்பு தொடர்பாக நாசர், கார்த்தி, பூச்சி முருகன், மனோபாலா உள்ளிட்ட விஷால் அணியினர் நேற்று மாலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், “தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்குப் பல பிரச்சினைகள் வந்தபோதிலும் அவற்றைச் சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். அதே நேரம், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம் என்று உறுதி கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon