மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை!

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை!

சென்னையில் உள்ள ஐஐடியில், கேரள மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூர் பகுதியைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். எம்.ஏ ஹியுமானிட்டிஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் பாத்திமாவின் தாய் சஜிதா நேற்று இரவு முதல் தனது மகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். பாத்திமா போனை எடுக்கவில்லை. காலையும் சஜிதா கால் செய்தபோதும் மாணவி போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சஜிதா, பாத்திமாவின் தோழிக்கு கால் செய்து தனது மகளிடம் கொடுக்கச் சொல்லி உள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் பாத்திமாவின் தோழிகள், அவரது அம்மா கால் செய்வதைத் தெரிவிப்பதற்காக பாத்திமா தங்கியிருந்த அறையை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவை திறக்காததால் வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விடுதி ஊழியர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது பாத்திமா மின் விசிறியில் நைலான் கயிறைக் கொண்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாத்திமா முதன்முறையாக குடும்பத்தைப் பிரிந்து வந்து விடுதியில் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் நடந்த இன்டர்னல் தேர்விலும் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதான் அவரது தற்கொலைக்குக் காரணமா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்று சென்னை ஐஐடியில் கடந்த ஆண்டும் கேரளாவைச் சேர்ந்த சாகுல் கோர்னாத் என்ற 23 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரி என்ற 25 வயது ஆராய்ச்சி மாணவி ஐஐடி வளாகத்தில் உள்ள சபர்மதி பெண்கள் விடுதியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனி, 9 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon