வள்ளுவத்தை எண்ணத்தில் பூசுவோம்!- வடசென்னை தமிழ்ச்சங்கம்

public

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, பாஜக முகநூல் பக்கத்தில் படம் வெளியிடப்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களாகவே வள்ளுவரை மையமாக வைத்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

திருவள்ளுவருக்கு சிலுவை கூட போட்டுக்கொள்ளலாம் அது அவரவர் இஷ்டம் என்று அமைச்சரே சொல்ல, வள்ளுவரை வைத்து மீம்ஸ் விளையாட்டுகளை ஆரம்பித்துவிட்டனர் சமூக தளத்தினர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் பேசுபொருளாகியிருக்கும் இன்றைய சூழலில், வள்ளுவரை விட வள்ளுவமே முக்கியம் என்ற அடிப்படையில், ஒரு ஆக்கபூர்வமான செயலை முன்னெடுத்திருக்கிறது வட சென்னை தமிழ்ச்சங்கம்.

இச்சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமையில் நேற்று நவம்பர் 8 ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூரில் இருக்கும் முரசொலிமாறன் பூங்காவில் தமிழ்ச்சங்கத்தினர் கூடினார்கள். மாலை நேரம் என்பதால் ஓய்வெடுக்கவும் நடைபயிற்சி செய்யவும் பலர் வந்திருந்தனர். அவர்களிடம், இன்று ’திருக்குறள் வாசிப்போம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்று சொல்லி அழைத்தார்கள்.

அகரமுதல என்ற முதற்குறட்பாவில் தொடங்கி பல்வேறு குறட்பாக்களை மாணவர் அருண்ராஜ் உள்ளிட்டோர் வாசிக்க, வடசென்னைப் படைப்பாளிகளான நிமோஷினி விஜயகுமாரன், எழில் கலை மன்றத்தின் நிறுவனர் கவிஞர் வேணு குணசேகரன், பெரியார் நகர் நூலக வாசகர் வட்டத் தலைவர் அ.இல.சிந்தா, கவிஓவியா கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் மயிலாடுதுறை இளையபாரதி, நான் ஒரு ஐஏஎஸ் அகாதமியின் இயக்குநர் கவிஞர் தமிழ் இயலன், கவிஞர் வி.உ. இளவேனில், கவிஞர் சிங்கார சுகுமாறன், கவிஞர் ப்ரியம், கவிஞர் மேகலன் உள்ளிட்டோர் குறளை பற்றி விரிவாகவும் குறள் சொல்லும் அரசியலையும் பேசினார்கள்.

முரசொலி மாறன் பூங்காவுக்கு நேற்று வந்திருந்த அனைவருக்கும், ‘திருக்குறள் வாசிப்போம்’ என்ற இந்நிகழ்வு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.

நிகழ்ச்சி பற்றி வட சென்னை தமிழ் சங்க தலைவர் இளங்கோவிடம் பேசினோம்.

“வள்ளுவரை வைத்து மலிவான விவாதங்கள் நடக்கும் நிலையில் வள்ளுவம் என்பது என்ன, வள்ளுவம் என்ன சொல்கிறது என்று மக்களிடம் கொண்டு செல்ல முடிவெடுத்தோம். அதன்படி திருக்குறள் வாசிப்பு, குறளைப் பற்றிய விளக்க உரை ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினோம். இதன் மூலம் வள்ளுவரின் மதம், சாதி பற்றிய விவாதத்தை விட வள்ளுவரின் திருக்குறள் பற்றிய விவாதம் நடைபெறவேண்டும் என்ற எங்கள் எண்ணம் நிறைவேறியது. வள்ளுவருக்கு வண்ணம் பூசுவதை விட அவரது திருக்குறளையும், குறள் வகுத்த நெறிகளையும் எண்ணத்தில் பூசிக் கொள்வதே முக்கியம் என்பதை வெளிப்படுத்தவே இந்நிகழ்ச்சி. இதுபோன்ற நிகழ்ச்சிகளை சென்னை முழுதும் தொடர்ந்து நடத்த இருக்கிறோம். பல்வேறு மாவட்ட இலக்கிய அமைப்புகளும் முன் வந்தால் தமிழகம் முழுதும் திருக்குறள் வாசிப்போம் நிகழ்வை நடத்துவோம்” என்று நம்பிக்கை மிளிர சொல்கிறார் வடசென்னை தமிழ்ச் சங்க தலைவர் இளங்கோ.

**-ஆரா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *