மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

அயோத்தி தீர்ப்பு: அமைதிகாக்க தலைவர்கள் வேண்டுகோள்!

அயோத்தி  தீர்ப்பு: அமைதிகாக்க தலைவர்கள் வேண்டுகோள்!

அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அயோத்தி வழக்கில் 1,045 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களுக்கு வழங்கியும், அதில் ராமர் கோயில் கட்டலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. சன்னி வஃக்ப் வாரியத்திற்கு மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி

“அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும்போது, சமூகத்தில் பரஸ்பர ஒற்றுமையையும் பராமரிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை இந்தியர்களான நமக்குள் வெளிப்படுத்தும் நேரம் இது”

திமுக தலைவர், ஸ்டாலின்

“நீண்ட நெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சினைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்கு பிறகு, அதனை எந்த விருப்புக்கும் வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்”

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர், கே.எஸ்.அழகிரி

தேசியக் கொடிக்கு நாம் எவ்வாறு மரியாதை செலுத்துகிறோமோ, அதேபோல உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் மரியாதை செலுத்த வேண்டும். நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று சிலரோ, நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சிலரோ கருதுவதில் எந்த பலனும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு எல்லாவிதமான சாதக, பாதக அம்சங்களையும் மனதில் கொண்டு, வரலாற்று நிகழ்வுகளையும் மனதில் கொண்டு, தொல்லியல் துறையின் முடிவுகளையும் மனதில் கொண்டு, இன்றைய நாட்டு நடப்பினையும் மனதில் கொண்டு மிகத் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பாமக நிறுவனர், ராமதாஸ்

“இந்தத் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.... யாருக்கும் தோல்வியும் அல்ல. உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதங்கள் வெறுப்பை விதைக்கவே பயன்படும். எனவே, விவாதங்களை தவிர்த்து, தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபட வேண்டும்”

சிபிஎம் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்

“இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வினைக் கொடுத்திருந்தாலும், அதன் மீது பல கேள்விகளும் எழுகின்றன.1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சட்ட விரோதச் செயல் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மசூதியை இடித்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கினை விரைந்து நடத்தி குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை என அனைத்து பகுதி மக்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்”

சிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். எந்தவொரு தரப்பும் வெற்றியாகவோ, தோல்வியாகவோ கருதாமல் நீதி பரிபாலன முறையின் உச்ச அமைப்பு வழங்கிய தீர்ப்பில் மதச்சார்பின்மை என்பது அரசில் அமைப்பு சட்டத்தின் அடிப்படை பண்பு என்று கூறியிருப்பதை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்க சூழலை பராமரித்து வருவது குடிமக்களின் கடமைப் பொறுப்பு என்பதை உணர்ந்து, அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்”

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர், காதர் மொய்தீன்

நவம்பர் 9ஆம் தேதி இந்தியாவின் மிக முக்கிய நாளாக மாறியுள்ளது. ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை ஏகமனதாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு அளித்திருக்கின்ற தீர்ப்பு இறுதித் தீர்ப்பு. இந்த தீர்ப்பை மதிக்கும் பொறுப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்தும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். இஸ்லாமிய சமுதாயம் உள்பட அனைத்து தரப்பு மக்கள் இதை குறை கூறவோ, விமர்சிக்கவோ தேவையில்லை.

அமமுக பொதுச் செயலாளர், தினகரன்

“அயோத்தி வழக்கில் நாட்டின் உயரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை, தீர்ப்பாக மட்டுமே கருதி அனைத்துத் தரப்பினரும் அணுகிட வேண்டும்.இந்த நேரத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தியர் என்ற உணர்வோடு, அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அவரவர் நம்பிக்கையைப் போற்றியபடி, தொடர்ந்து ஒற்றுமையுடன் திகழ்ந்திடுவோம்”

நடிகர், ரஜினிகாந்த்

“அயோத்தி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கிறேன். தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் மத பேதம் இன்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்”

என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

சனி, 9 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon