மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 19 பிப் 2020

போராட்டங்களை தூண்டுகிறார் ஸ்டாலின்: எடப்பாடி

போராட்டங்களை தூண்டுகிறார் ஸ்டாலின்: எடப்பாடி

திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதும் போராட்டங்களை தூண்டிக்கொண்டிருக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44,924 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிமுக வேட்பாளர் நாராயணன் வெற்றிபெற்றார். இதனையடுத்து இரு தொகுதிகளிலும் நன்றி அறிவிப்புப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் விக்கிரவாண்டியில் நேற்று (நவம்பர் 8) நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் இடைத் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் எப்போது போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளார் ஸ்டாலின். ஆனால், அவரது எண்ணங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் மூலம் நிராசையாகியுள்ளது. இடைத் தேர்தலில் அல்வா கொடுத்து அதிமுக வெற்றி பெறவில்லை. ஆனால் மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர்” என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து, “வரும் சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றிபெறுவோம் எனக் கூறிக்கொண்டு இன்று பலர் கிளம்பிவிட்டனர். இந்த இடைத் தேர்தல் வெற்றியைப் பார்த்தும் கூட அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். யாரென்று உங்களுக்குத் தெரியும். பாதி நாட்கள் வெளியூரில்தான் அவர்கள் இருப்பார்கள். அரசியலையும் அவர்கள் தொழில் என்று நினைத்துக்கொண்டார்கள். இரவு, பகல் பாராமல் உழைத்தால்தான் மக்களின் நன்மதிப்பைப் பெற முடியும். யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான்” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி,

“எம்.ஜி.ஆர் எடுத்தவுடனேயே பதவிக்கு வரவில்லை. முதலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றினார். அவருக்கு இணையாக எந்தவொரு தலைவரும் திரைத் துறையிலிருந்து வரமுடியாது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வீட்டிலிருந்தபடி பேட்டி கொடுப்பவர்கள் அல்ல. உழைப்பின் மூலம் முன்னேறியவர்கள்” என்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon