�டிஜிட்டல் திண்ணை: அயோத்தி தீர்ப்பு: அனைத்து மசூதிகளுக்கும் பாதுகாப்பு!

public

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனுக்கு வந்தது.

“1992 ஆம் தேதி டிசம்பர் 6 ஆம் தேதி இந்தியாவையே அதிர வைத்த அந்த சம்பவத்துக்கான நினைவுநாளை ஒவ்வொரு வருடமும் இந்தியா பதற்றத்தோடே கடந்து வந்திருக்கிறது. கரசேவகர்களால் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தில் நாட்டில் எங்கே என்ன நடக்குமோ என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதும், சோதனைகள் தீவிரமாவதும் வழக்கமாயின.

இந்திய அரசியல் வரலாற்றிலும், சமூக வரலாற்றிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த டிசம்பர் 6 க்குப் பிறகு இன்று நவம்பர் 9 ஆம் தேதியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக என்னென நடக்கும் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில் தமிழகம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு நேற்று அதிகரிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெறுவதை ஒட்டி நவம்பர் 13க்கும் 17க்கும் இடையில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் நவம்பர் 10 ஆம் தேதிக்கு மேல் தமிழக போலீஸார் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று டிஜிபி சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் நவம்பர் 9 தேதியே தீர்ப்பு என்று தெரியவந்ததால் நேற்று இரவுமுதலே தமிழக போலீசார் அனைவரும் அலர்ட் செய்யப்படனர். மருத்துவ விடுப்பு, சாதாரண விடுப்பில் இருந்த போலீஸார் அனைவரும் உடனடியாக பணிக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அதோடு தமிழகம் முழுதும் காவல்துறைக்கு வேலைக்கு ஆள் சேர்க்கும் முகாம்கள் நடந்துவருகின்றன. இன்று உயர பரிசோதனை நடப்பதாக இருந்தது. ஆனால், தீர்ப்பு அறிவிப்பை அடுத்து இந்த நிகழ்ச்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டன. அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக அவரவர் காவல் நிலையங்களுக்கு நேற்று இரவே சென்று தங்களது வழக்கமான டூட்டியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் அனைவரும் நேற்று இரவே காவல்நிலையத்துக்கு வந்த தகவலை எஸ்.பி.க்கு உடனடியாக அனுப்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தமிழக காவல்துறையில் மத அடிப்படைவாத விவகாரங்களை கையாள்வதற்கான ஒரு பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. அண்மையில் மசூதிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை தடை செய்தபோது ஒவ்வொரு மசூதியிலும் நிலைமை என்ன என்பதைக் கண்காணித்தவர்கள் இவர்கள்தான். இந்த போலீஸார் கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் ஒவ்வொரு காவல் நிலைய லிமிட்டிலும் இருக்கும் மசூதிகள், கோயில்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற பட்டியலை எடுத்து அந்தந்த மாவட்ட காவல்துறை தலைமைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் நேற்று இரவு முதல் மசூதிகளுக்கெல்லாம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு மசூதிக்கும் எத்தனை போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள், பாதுகாப்பு அளிக்கும் போலீஸாரின் விவரங்கள் ஆகியவற்றையும் எஸ்பிக்கள் கேட்டுப் பெற்றிருகின்றனர். இந்த வகையில் தமிழகம் எங்குமுள்ள மசூதிகளுக்கு நேற்று இரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சில கோயில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுதும் இந்து- முஸ்லிம் மக்கள் சேர்ந்து வாழும் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு, முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் தனியாக கணக்கெடுக்கப்பட்டு எல்லா பகுதிகளிலும் போலீஸாரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல்நிலைய அதிகாரிகளும் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களோடு மைக் தொடர்பில் இருக்க வேண்டுமென்றும் , அனைத்து எஸ்பிக்களும் டிஜிபி அலுவலகத்தோடு மைக் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. சென்னை, கோவை போன்ற மாநகரங்களில் உளவுத் துறையின் கூடுதல் தீவிரத்தோடு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விக்கிரவாண்டி நன்றி அறிவிப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு சேலம் புறப்பட்டுச் சென்றார். இன்று அமைச்சர் அன்பழகன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் தர்மபுரியில் கலந்துகொள்கிறார். தீர்ப்பு தேதி பற்றிய தகவல் வெளியானதும் முதல்வரைத் தொடர்புகொண்டு டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள் பாதுகாப்புப் பணிகள் பற்றி விவரித்திருக்கிறார்கள்.

தீர்ப்பு வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்ட நேற்று இரவு முதல் இப்போது வரை தமிழ்நாட்டில் ஒரு போலீஸாரும் தூங்கவில்லை என்பதே நிஜம். தீர்ப்பு நேரம், அதைத் தாண்டிய சூழல்களை சமாளிக்க தயார் நிலையிலிருக்கிறார்கள் தமிழக போலீஸார்”என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *