மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 நவ 2019

காற்று மாசு: டெல்லியை விட சென்னையில் அதிகம்!

காற்று மாசு: டெல்லியை விட சென்னையில் அதிகம்!

டெல்லியை விட சென்னையில் காற்றுமாசு அதிகரித்திருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வழக்கத்தை விட காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் பயன்படுத்தியபடிதான் பொது இடங்களுக்கு சென்றுவருகின்றனர். டெல்லியை உலுக்கிய காற்று மாசுபாடு சென்னையிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. சென்னையின் பல இடங்களிலும் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டம் போல காட்சியளிக்கிறது. பனிமூட்டம்தான் என நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், “வழக்கத்தை விட காற்றின் வேகம் முற்றிலுமாக குறைந்துள்ளதால், வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, கடல்மட்டத்தில் இருந்து 700 மீட்டர் தொலைவில் வளிமண்டலத்திற்குள் நீடிக்கிறது. எனவே பனி மூட்டம் போல் புகை காட்சியளிக்கிறது. காற்றின் வேகம் அதிகரிக்கும் போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பும்” என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 8) அறிக்கை வெளியிட்ட மாநிலங்களை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், “இந்தியாவில் காற்று மாசு, மூச்சுத்திணறல் என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் நகரம் டெல்லிதான். ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லியை மிஞ்சும் அளவுக்கு சென்னையில் காற்று மாசு அதிகரித்திருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிற்பகல் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு புகை மூட்டம் அதிகமாக உள்ளது.இதற்குக் காரணம் சென்னையில் காற்று மாசு குறியீடு அதிகபட்சமாக 374 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதுதான்” என்று கூறியுள்ளார்.

மேலும், “காற்றில் கலந்துள்ள மாசு துகள்களின் அளவு 50-க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது தூய்மையான காற்றாக கருதப்படும். டெல்லியில் இந்த அளவு 254 என்ற அளவை தாண்டியதால் தான் டெல்லியை கடுமையான காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரம் என்று அறிவித்து, மாசை குறைக்க பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.டெல்லியின் காற்று மாசுவை விட 50% கூடுதலான காற்று மாசு சென்னையில் உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் மூச்சு விட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க முகமூடி அணியும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி,

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் மிகவும் தெளிவானவை. சென்னையின் புறநகர் பகுதிகளான கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளில் இருந்து மீத்தேன் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாவதும், அடிக்கடி அந்த குப்பைக் கிடங்குகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டதும்தான் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.

இவைதவிர, சென்னையின் பல பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை, சீரமைக்கப்படாத சாலைகளில் இருந்து எழும் புழுதி ஆகியவையும் சென்னையின் காற்று மாசுக்கு முக்கியக் காரணங்கள் ஆகும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “தென்மேற்கு காற்றும், வடகிழக்கு காற்றும் உரிய அளவில் வீசும் போது மாசு கலந்த காற்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும். ஆனால், இப்போது போதிய அளவு காற்று வீசாததன் விளைவாகவே சென்னையின் காற்று மாசு வெளிப்படையாகியுள்ளது.சென்னையின் தட்பவெப்ப நிலை மாறி, போதிய அளவில் காற்று வீசத் தொடங்காவிட்டால் காற்று மாசு நீடிக்கும்.

அத்தகைய சூழலில் சென்னையில் உள்ள மக்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் அடைப்பு, சளி, தோலில் அரிப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் சென்னை மாநகரம் வாழத்தகுதியற்ற நகரமாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் உண்டு” என்று கூறியுள்ள அன்புமணி,

சென்னையின் இரு பெரு குப்பைக் கிடங்குகளை மூடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் சென்னையில் காற்று மாசுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளி, 8 நவ 2019

chevronLeft iconமுந்தையது