மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 11 டிச 2019

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு: சன்னி வஃக்ப் வாரியம்!

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு: சன்னி வஃக்ப் வாரியம்!

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என சன்னி வஃக்ப் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று (நவம்பர் 9) காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் வழங்கப்பட்டது. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் அளித்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இனி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும், இஸ்லாமியர்களுக்கு அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டமைப்பை 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த சன்னி வஃக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் ஷாபர்யாப் ஜிலானி, “நாங்கள் நீதிமன்றத் தீர்ப்பினை மதிக்கிறோம். எனினும் தீர்ப்பு எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து தீர்மானிப்போம். எங்களுடைய குழு ஒப்புக்கொண்டால் சீராய்வு மனு தாக்கல் செய்வோம். அது எங்களுடைய உரிமை என்பதோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்ற விதிகளிலும் அது உள்ளது” என்று குறிப்பிட்டார். எந்தவொரு இடத்திலும் எந்தவித ஆர்ப்பாட்டங்களும் நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சனி, 9 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon