மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

தீர்ப்பு: அமைதியில் அயோத்தி!

தீர்ப்பு: அமைதியில் அயோத்தி!

அயோத்தி வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அயோத்தி பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடே எதிர்பார்த்து வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 9) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சாசன அமர்வில் வழங்கப்பட்டது. அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பையே வழங்கினர்.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து மதத்தினருக்கே கொடுக்கப்படுகிறது. அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் அமைப்பினரிடம் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது உறுதியானது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்து மாநில முதல்வர்களோடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அடுத்தடுத்து கருத்து தெரிவித்த பல தலைவர்களும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பொதுமக்களை அமைதி காக்குமாறு வலியுறுத்தினர்.

தீர்ப்பு வந்ததையடுத்து, பொருளாதார மந்தநிலை தொடர்பாக டிசம்பர் 1ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் நடத்த இருந்த போராட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பில் மாறுபட்ட கருத்தைக்கொண்டிருப்பினும்கூட நாட்டில் எந்த இடத்திலும் அசம்பாவித சம்பவங்களோ அல்லது போராட்டங்களோ நடைபெறவில்லை.

தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்வோம் என சன்னி வஃக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தாலும், சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய மாட்டோம் என அதன் தலைவர் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் தீர்ப்பு தொடர்பாக ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கூறி இயக்கத்தை முன்னெடுத்த பாஜக மூத்த தலைவர் அத்வானியும் கருத்து தெரிவித்துள்ளார்.

“அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவருடன் சேர்ந்து முழு மனதுடன் நானும் வரவேற்கிறேன். எனக்கு நிறைவைத் தரும் தருணம் இது. ஏனென்றால் இந்த இயக்கத்துக்கான பங்களிப்பைச் செய்ய கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்குப் பின்னர் இது மிகப் பெரியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று அதற்கான சாத்தியமான முடிவுகளை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் தீர்ப்பை வரவேற்றார்.

சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, “இந்த நாள் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். வரும் 24ஆம் தேதி நான் அயோத்திக்குச் செல்ல இருக்கிறேன். மேலும், பாஜக மூத்த தலைவர் அத்வானியைச் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து சொல்ல இருக்கிறேன். ஏனெனில் அதற்காக அவர் ரத யாத்திரை மேற்கொண்டார். கண்டிப்பாக அவரை சந்தித்து ஆசி பெறுவேன்” என்று குறிப்பிட்டார்.

தீர்ப்பு வெளியான நிலையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அயோத்தி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அயோத்தியில் சரயூ ஆற்றங்கரையில் தினந்தோறும் மாலை நடைபெறும் 'ஆர்த்தி' நிகழ்ச்சி வழக்கம்போல நடைபெற்றது.

நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அயோத்தி பாதுகாப்பு அதிகாரியான அமர்சிங், “அயோத்தியில் ஒரு சிறிய அசம்பாவிதம்கூட நடக்கவில்லை. இந்து சகோதரர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் எந்த சவாலையும் சந்திக்கவில்லை. நாங்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் ரோந்து சென்றுவருகிறோம்.. சாதாரணமான சூழ்நிலையே நிலவிவருகிறது” என்று தெரிவித்தார்.

இதுபோலவே தமிழகத்தில் மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் எனப் பல இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும், தமிழகத்திலும் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. இருப்பினும் இன்னும் சில நாட்களுக்குப் பாதுகாப்பில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ஞாயிறு, 10 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon