மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 15 ஜூலை 2020

ஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்கவேண்டும்: பாஜகவை தாக்கும் சிவசேனா!

ஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்கவேண்டும்: பாஜகவை தாக்கும் சிவசேனா!

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேவேந்திர பட்னாவிஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் புதிய அரசு அமைவதில் பாஜக - சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில், பதவிக் காலம் முடிந்ததால் முதல்வர் பதவியிலிருந்து கடந்த 8ஆம் தேதி தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று(நவம்பர் 9) அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான கடிதத்தையும் பட்னாவிஸ் பெற்றுக்கொண்டுள்ளார். நாளைக்குள் (நவம்பர் 11) சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் கெடு விதித்துள்ளார். ஆனால், பாஜகவுக்கு இருப்பதோ 105 இடங்கள் மட்டுமே. மற்ற இதர சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றால்கூட 130 எம்எல்ஏக்களுக்கு மேல் தாண்டாது.

முதல்வர் பதவி இல்லாமல் பாஜகவை ஆதரிக்கப் போவதில்லை என்பதில் சிவசேனா தொடக்கம் முதலே பிடிவாதமாக இருந்து வருகிறது. தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்க முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டிய சிவசேனா, கட்சி தாவாமல் பாதுகாக்க அவர்களை பாந்த்ராவில் உள்ள ரங்ஷரதா ஹோட்டலில் தங்கவைத்துள்ளது.

இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், கட்சிகள் குதிரை பேரத்தில் ஈடுபடாமல் இருக்க ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சூழலில் பாஜகவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் எம்.பியும் சாம்னா நாளேட்டின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “'மாநிலத்தில் சிலர் அச்சமூட்டும், மிரட்டல் அரசியலைக் கையில் எடுத்து அரசியல் ஆதரவு பெற நினைக்கிறார்கள். அது நிச்சயம் அவர்களுக்கு உதவாது. ஒரு விஷயத்தை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஹிட்லர் கூட ஒரு நாள் இறந்துவிட்டார் என்பதையும், அடிமைத்தனத்தின் மேகங்கள் மறைந்துவிட்டன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்தைப் பெற்றதால் இரண்டாவது முறையாக முதல்வராக வந்துவிடலாம் என நினைத்தாலும், அவரால் இன்னும் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை. அவரால் பதவி ஏற்கவும் முடியவில்லை. ஏனென்றால் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மாநிலத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.

எல்லோரும் பழிவாங்குதல், அடிபணிதல் மற்றும் மோசமான தந்திரங்களை விளையாடுவது போன்ற அரசியலை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதாக நம்பிக்கை இருந்தால் 24 மணி நேரத்தில் (முடிவுகளுக்குப் பிறகு) ஏன் உரிமை கோரவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய் ராவத்.

ஞாயிறு, 10 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon