மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 26 பிப் 2020

கிச்சன் கீர்த்தனா: மிளகு ரசம்

கிச்சன் கீர்த்தனா: மிளகு ரசம்

சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, ரசம் என்றால் அநேகருக்குப் பிரியமே. ரசத்துக்கு உபயோகிக்கும் மிளகுக்கு விஷத்தை முறிக்கும் சக்தி உள்ளது. நாம் உண்ணும் உணவில் ஏதாவது உபாதை ஏற்படுவதாக இருந்தாலும் இந்த மிளகு அதை சரி செய்து விடுகிறது. இதனாலே நம் முன்னோர்கள் கடைசியாக மிளகு ரசம் சாப்பிடுமாறு கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட சுவையான மிளகு ரசம் செய்வது எப்படி?

என்ன தேவை?

புளி - சிறிய எலுமிச்சை அளவு

தக்காளி - 3

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

பூண்டு - 8 பல் (சிறியது)

கறிவேப்பிலை - 2 கீற்று

கொத்தமல்லி இலை - சிறு கைபிடி அளவு

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

உப்பு , நல்லெண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

புளியைத் தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.மிக்ஸியில் முதலில் மிளகு, சீரகத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசல், அரைத்த தக்காளி விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். தணலைக் குறைத்த விட்டு அதனோடு அரைத்த மிளகு சீரகக் கலவையைச் சேர்த்து அரை நிமிடம் வதக்கி பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடைசியாக புளி, தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை கலந்த கலவையை ஊற்றி, உப்பு சேர்க்கவும். தணலைக் கூட்டி வைக்கவும். ரசம் நுரை கூடியதும் பாத்திரத்தில் மூடி விடவும். சுவையான மிளகு ரசம் தயார்.

குறிப்பு: புளியின் அளவு மிகவும் கூடியோ, குறைந்தோ இருந்தால் ரசம் நன்றாக இருக்காது.

நேற்றைய ஸ்பெஷல்: தோசைக்கல்லில் தோசை ஒட்டாமல் வர என்ன வழி?

திங்கள், 11 நவ 2019

chevronLeft iconமுந்தையது