மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

மறைந்தார் தேர்தல் நாயகன்!

மறைந்தார் தேர்தல் நாயகன்!

நேர்மையான வெளிப்படையான தேர்தல்களை இந்தியாவில் நடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்று (நவம்பர் 10) இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சேஷன், தமிழகத்தில்தான் தனது ஐஏஎஸ் வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழகத்தில் துணை கலெக்டர், துறைச் செயலாளர் என்று பல பதவிகளை வகித்தவர், ராஜீவ் காந்தியால் மத்திய அமைச்சரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1990 முதல் 96 வரை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தார் சேஷன். அப்போது அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் நேர்மையான, வெளிப்படையான தேர்தலை நடத்துவதற்கு பெரிதும் துணைபுரிந்தது. முதன்முதலில் இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டுவந்து அதுவரை நடைமுறையில் இருந்த அபரிமிதமான கள்ள ஓட்டுகளை வெகுவாகக் குறைத்தார்.

சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது தேர்தல் ஆணையக் கண்காணிப்பாளராக இருந்தார் குரேஷி. பின்னாட்களில் இவர் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி வகித்தார்.

சேஷன் பற்றி அவர் குறிப்பிடும்போது, "தேர்தல் கண்காணிப்பாளர்கள் எப்படி கவனமுடன் அச்சமற்ற தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவார் சேஷன்.

ஒருமுறை பிகார் சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது என்னைக் கண்காணிப்பாளராக நியமித்தார் சேஷன். அதுவும் பதற்றத்திற்குப் பெயர் பெற்ற லல்லு பிரசாத் யாதவ் போட்டியிடும் தொகுதிக்கு என்னை கண்காணிப்பாளராக நியமித்தார்‌. டெல்லியிலிருந்து என்னை அனுப்பி வைக்கும்போது அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. 'ஒண்ணும் பிரச்சனை இருக்காது. உங்க முகத்தில குண்டு வீசுவாங்க. அப்படி இல்லேன்னா வயிற்றில் துப்பாக்கியால் சுடுவாங்க. தவிர பெருசா ஒண்ணும் நடக்காது. தைரியமா போயிட்டு வாங்க' என்று சொல்லிதான் என்னை வழியனுப்பி வைத்தார்.

அவர் சொன்னதற்கு ஏறக்குறைய சரியாக என் கண்முன்னால் இரண்டடி தூரத்தில் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், எனக்கு ஏதும் காயமில்லை அந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது" என்று குறிப்பிடுகிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி.

பற்பல அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்த சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 11 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon