மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: பாஜகவின் மாநிலத் தேர்தல் தோல்விகள்!

சிறப்புக் கட்டுரை: பாஜகவின் மாநிலத் தேர்தல் தோல்விகள்!

வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

இந்துத்துவ சங் பரிவார் பாஜக அநேகமாக, இந்திய அரசியலை முற்றிலுமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டது என்பதான பார்வை நிலவும் நேரமிது. அதுமட்டுமில்லை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்ட அனைத்து அமைப்புகளும் சிஏஜி துவங்கி சிபிஐ ஊடாக உச்ச நீதிமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டில் என்றும் கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் என்பதும் யதார்த்தம். ஆனாலும் மோடியையும், அமித் ஷாவையும் சகல வல்லமையும் பெற்ற சர்வாதிகார சக்திகளாக மாற்றிய 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலின் சாகச வெற்றிக்கு முன்னரும் பின்னருமான மாநிலத் தேர்தல்களில் பாஜகவினால் அதே வெற்றியை ஏன் பெற முடிவதில்லை என்பதுதான் இப்போதைய பெரும் கேள்வி.

சின்னச் சின்ன மாநிலங்களில் சாகசம்

இதோடு இன்னொரு கேள்வியையும் இணைத்துக்கொண்டால் இந்த விடயம் குறித்த அலசல் இன்னும் வலுவாகலாம். ஆம், 2014ஆம் ஆண்டு தொடங்கி கோவா, மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட குட்டி மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக சட்டமன்ற உறுப்பினர்களை ‘குதிரை பேரம்’ செய்து விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக ஏன் அந்த வித்தையை இன்னபிற சற்றே பெரிய மாநிலங்களில் நடத்த முடியவில்லை. சமீபத்தில்கூட ஹரியானாவிலும் அதற்கு சற்று முன்னர் கர்நாடகத்திலும் நடந்த ‘குதிரை பேரம்’ ஏன் மஹாராஷ்டிரத்தில் நடக்கவில்லை. இந்தக் கேள்விக்கான பதில் எளிமையானதில்லை.

கோவாவில் அந்தச் சாதனையைச் செய்ய மனோகர் பாரிக்கர் என்ற சாகசக்காரர் இருந்தார். ஆனால், அவரையே ரஃபேல் விவகாரத்தில் மூக்கை நுழைக்க விடாமல் செய்யவே அங்கே அனுப்பப்பட்டார் என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். மேகாலயா, நாகாலாந்து எல்லாம் அந்தந்த மாநில முதல்வராக ஆசை கொண்டவர்கள் முதலீட்டில் அமித் ஷாவின் ஆசீர்வாதத்தோடு ’மட்டும்’ நடந்த சின்ன விடயங்கள். ஒரு முனிசிபல் கார்ப்பரேஷன் அளவான சமாச்சாரம்.

பார்ப்பன எதிர்ப்பு சிவசேனாவும் பட்னாவிஸும்

ஆனால் அவற்றோடு இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரைக் கொண்ட மஹாராஷ்டிராவை ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனம். மராட்டியர் பெரும்பான்மை அரசியலை ஏறக்கட்ட அல்லது ஒழித்துக்கட்டுவதற்கான கண்டுபிடிப்புதான் ஆர்எஸ்எஸ் தொண்டரான இந்தப் பார்ப்பனர் தேவேந்திர பட்னாவிஸ். மராட்டிய அரசியலில் முதல்வராகும் வரை அடையாளமற்ற மனிதர். எனவே அவரது நேர்மை, அவர் முதல்வரான நொடியிலேயே காலாவதியாகிவிட்டது. இப்போது கூட அவரது முதல்வர் பதவி மீதான குரங்குப் பிடிதான் பாஜக - சிவசேனா உறவை முறித்திருக்கிறது. ஆனால், அவரது பிடிவாதம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ‘இருவர் அணியின்’ ஆசீர்வாதமின்றி இருக்க இயலாது என்பதும் உண்மை. இந்தப் புள்ளியில் ஒரு செய்தியை, தெரியாதவர்களுக்கு தெரிவித்துவிட்டு தொடர்வது நல்லது. மராட்டிய மண்ணின் மைந்தர் அதிகாரம் கோரும் இந்துத்துவ சிவசேனா பார்ப்பன எதிர்ப்பு அடிப்படை கொண்டது என்பதுதான் அந்தத் தகவல். மராட்டியர் உரிமையையும், இந்து மதவாதத்தையும் பிரிக்க இயலாத பகுத்தறிவுவாத தலைமையின்மையின் விபரீத விளைவு. இப்போதைக்கு இதுபோதும். இனி பாஜக மாநிலத் தோல்விகள் குறித்துத் தொடரலாம்.

பாஜகவில் பனியா முதலீட்டியம்

செய்தி புதிதல்ல எனினும் பார்வைக் கோணத்தைத் தெளிவாக்க ஒரு சின்ன பின்னோட்டம். இன்றைய பாஜக அதன் வெற்றி அனைத்திற்கும் காரணம், நாக்பூர் பார்ப்பன ஆர்எஸ்எஸ் தலைமைக்கும், குஜராத் பனியா முதலீட்டியத்திற்கும் 2012 வாக்கில் ஏற்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான கூறுகளில் முக்கியமானது, பாஜக எனும் கட்சியை குஜராத் பனியா முதலாளிகளின் இருவர் அணியான நரேந்திர தாமோதர மோடி மற்றும் அமித் ஷா எனும் இரட்டையரிடம் முற்றிலுமாக ஒப்படைத்து விடுவது. அவர்களில் மோடி என்பவர் வெகுநாளாக பனியா முதலீட்டியத்திற்கு அரசியல் முகமாக இருந்து அதன் நலனைக் காத்தவர்.

மற்றொருவரான அமித் ஷாதான் அசலான சூத்ரதாரி. பனியா முதலீட்டியம் நேரடியாக அமித் ஷாவிடம் மட்டுமே தனது தேவைகள், நலன்கள் பற்றி பேசும். மோடியின் வேலை மேடையில் அவர்கள் எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசுவது மட்டுமே. சரி, இதில் நாக்பூர் ஆர்எஸ்எஸ் நலன் என்ன? இந்தப் புள்ளியில் குஜராத் பனியா முதலாளிகளுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் ஒரு பொதுவான உடன்பாடு உண்டு. பனியா முதலீட்டிற்கு இந்திய அரசும் சந்தையும் தனது லாப நோக்கிற்கு சாதகமாக மட்டுமே நடக்க வேண்டும். அதாவது, இந்தியா ஒற்றை சந்தையாக இருக்க வேண்டும். அதன் வரி விதிப்பு விதிகள் அவர்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தக் கூடாது. அதைவிட அவர்கள் ஆலோசனையின்படியே பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் லட்சியம் ஒற்றை இந்து இந்தியா. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி. பனியாவின் தேவையான ஒற்றை சந்தையும், இந்துத்துவாவின் ஒற்றை இந்தியாவும் ஒன்றேதான் என்பதால் இருவரது லட்சியங்களும் இணையும் புள்ளி தெளிவானது. சரி, இந்த ஒற்றை இந்தியா எனும் கோட்பாட்டிற்கும் மாநிலங்களின் தோல்விக்கும் என்ன தொடர்பு. இருக்கிறது?

மாநிலங்களில் எடுபடாத தேசியப் பூச்சாண்டிகள்

பாஜகவின் ஒற்றை இந்தியாவின் மாபெரும் எதிரி மாநிலங்கள் என்ற அமைப்பே. எழுபதாண்டு கால இடியாப்பச் சிக்கலை தீர்ப்பதாக காஷ்மீரை பிளந்தது போல அனைத்து மாநிலங்களையும் பிளந்து சிதறடிப்பதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கனவும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதுதான் மாநிலங்களின் தோல்வி நிகழ்வுகள். இந்தியத் தேர்தல் எனும் போது வெகுவாக உதவும் இஸ்லாமிய தீவிரவாதம், பாகிஸ்தான், இந்தியப் பாதுகாப்பு ஆகியவை மாநிலங்களின் தேர்தலின்போது உதவுவதில்லை. ஒரே ஒரு புல்வாமா பயங்கரம் அதைத் தொடர்ந்த பாலகோட் தாக்குதல் சாகசம், தோல்வியின் விளிம்பில் தடுமாறிய மோடி / அமித் பாஜகவை அபார வெற்றியடையச் செய்யப் போதுமானதாக இருக்கும்போது மாநிலத் தேர்தல்களில் அது பெரிதாக உதவுவதில்லை. அதைவிட தனியாக நடக்கும் மாநிலத் தேர்தல்களில் தேசியப் பாதுகாப்பு பூச்சாண்டிகள் சிறிய அளவில் கூட உதவுவதில்லை.

தேசியமும் விவசாயிகள் தற்கொலையும், கூட்டுறவு வங்கியும்

அதனால்தான் இவர்கள் (மோடி / அமித் மட்டுமே பாஜக என்பதால்) ஒரே தேர்தல், அதாவது நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல். இந்தத் தேர்தலில் கூட மோடியின் ‘மித்ரோ’ பசப்பு தேசியம் பேசியபோது, மராட்டியம் விவசாயிகளின் தற்கொலையையும், பஞ்சாப் அண்ட் மஹாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி விவகாரமும் முன்னுரிமை பெற்றன. இந்திய டைம்ஸ் நவ், இந்தியா டுடே, ரிலையன்ஸ் கம்பெனியின் சிஎன்என் நியூஸ் 18 போன்றவை ஊதிய ‘பிரபுல் பட்டேல் – தாவூத் இப்ராஹிம் தொடர்பு’ விவகாரம் சரத் பவார் கட்சியின் வெற்றியை பாதிக்கவில்லை. அதைவிட வேடிக்கை, அநேகமாக தேர்தலை ஏனோதானோ என எதிர்கொண்ட காங்கிரஸ் கணிசமான இடங்களை வென்றது. இதைவிட வேடிக்கை ஹரியானாவில். அங்கு காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டு விட்டது, இரட்டை இலக்க எண்ணிக்கையில் கூட வெல்ல மாட்டார்கள் என்று சொல்லப்பட்டபோது, அது பாஜகவை விடக் கூடுதல் எண்ணிக்கையில் வென்று வெற்றிக் கோட்டை நெருங்கியது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் காங்கிரஸ் தலைமையே, நம்பிக்கை இழந்து விட்டபோது அது பெற்ற வெற்றி.., என்ன நடந்தது?

மாநிலத் தலைமைகளை மதிக்காத போக்கு

தேசியக் கட்சிகளின் பெரும் சிக்கலே மாநிலத் தலைமைகளை அங்கீகரிப்பது, ஏற்பது என்பதே. காங்கிரஸ் கதையைப் பார்த்தாலே இது விளங்கும். இன்று மேற்கு வங்காளம், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களில் வலுவான கட்சிகளாக, ஆளுங்கட்சிகளாக இருப்பவை முன்னாள் காங்கிரஸ் தலைவர்களின் தலைமையிலானவைகளே. காங்கிரசை விட மூர்க்கமாக ‘ஒற்றை’ என்ற மூர்க்க வெறிபிடித்த கட்சியின் நிலை அதைவிட பயங்கரமானது. இந்த ‘ஒற்றை’ பாசிசம், இந்திய அரசியலரங்கிலேயே, தங்களது கட்சி மட்டுமே இருக்க வேண்டுமென்ற வெறி கொண்டதாய் இருப்பதுதான் பேராபத்து. அதைவிட மோசமான விடயம், தங்களிருவர் தவிர கட்சியின் பிரமுகர்களாக வேறு யாரும் இருக்கக் கூடாது என்ற வெறி. அதிலும் குறிப்பாக மாநில அளவிலான தலைமை விவகாரத்தில் காங்கிரசை விட மோசமானவர்கள் இரட்டையர்.

இந்த இடத்தில் பாஜக ஏன் குதிரை பேரத்தை உடனடியாக முயல்வதில்லை என்ற கேள்விக்கான விடை கிடைக்கலாம். இந்தவிதமான சாமர்த்தியங்களைச் செய்து முடிக்க வலுவான மாநிலத் தலைமைகள் வேண்டும். கர்நாடகாவில் சாதித்துக் காட்டிய எடியூரப்பா, ஏற்கனவே தலைமை அவரைக் கட்டுப்படுத்த முனைந்தபோது தனிக்கட்சி கண்டு, பாஜகவை வீழ்த்தியவர். வேறு வழியின்றி மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டவர். மாநிலத் தலைவர்களை வலுவானவர்களாக்குவதில் முக்கியமான பாத்திரம் வகிப்பவை அவர்களது சாதிப் பின்புலமும், ஊழல் பொருளாதாரமும். இவை இரண்டும் சர்வசதா காலமும் மையமான ஒற்றைத் தலைமையை சவாலுக்கழைத்துவிட வல்லவை.

மராட்டியத்தில் சிவசேனையும், தேசியவாத காங்கிரசும் மராட்டியர் அரசியல் கட்சிகள். காங்கிரசும் அதை ஒட்டியே நகரும். ஆனால் அவ்வப்போது மராட்டிய ‘சவான்களை’ (பிரித்திவிராஜ், அசோக்) பந்தாடி அவர்களை பலவீனமாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் களத்தில் பார்ப்பன தேவேந்திர பட்னாவிஸ். பட்னாவிஸ் மராட்டியருக்கான ஒதுக்கீடு வழங்கிய போதும் அவரது தலைமையை மராட்டியர் ரசிப்பதாயில்லை. இதேதான் ஹரியானாவிலும், பெரும்பான்மை ஜாட்களுக்கெதிராக கத்தாரை முன்னிறுத்தியது பாஜக. வேறுவழியின்றி கடைசி நிமிடத்தில் ஜாட் ஹூடாவை தலைமையேற்க அனுமதித்தது காங்கிரஸ். ஆனாலும் காங்கிரஸ்தான் பெரும்பான்மை பெற்றது. இப்போது ஜாட் தேவிலால் கொள்ளுப் பேரன் துஷ்யந்த்திடம் சரணடைய வேண்டியதானது பாஜக வுக்கு. ஊழலை ஒழிக்க வந்த உன்னதர்கள் அப்பாவும், தாத்தாவும் ஊழல் குற்றவாளிகளாக ஆயுள் தண்டனை பெற்று உள்ளே இருக்கும் போது பேரன் உருவாக்கியுள்ள புதிய ஜாட் கட்சியுடன் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டாட்சி.

இந்த இடத்தில் அமித் ஷாவின் வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வது நல்லது. அந்த பனியா அரசியல்வாதிக்கு பணம்பற்றிய மதிப்பு நன்கு தெரியும். பணம் கொடுத்து சரிக்கட்டும் அரசியல் , கொடுப்பதற்கு ஒருவரை அணுக வேண்டியதாகும், அது அவரை அதிகாரம் கொண்டவராக்கும். அதற்காக பனியா முதலாளிக்கு கையிருப்பை வைத்து சூதாட, குதிரைகள் வாங்க ஒருபோதும் மனம் வராது. பணம் கொடுப்பது என்பதே அரசு அதிகாரத்தை தனது சேவகம் செய்ய வைப்பதற்கு மட்டுமே. அதையும் அவர்களையே சம்பாதித்து கொள்ள அனுமதிப்பது மட்டுமே. அதிலும் கறாராக தன் பங்கு வசூலிக்கப்படும். நாளை அந்த அதிகாரமே தனக்கெதிராய் வந்தால், அந்தத் திருட்டு குறித்த ஆதாரங்களே அவர்களை கட்டுப்படுத்த அல்லது அழிக்க உதவும் ஆதாரமாகும். இதற்கான அருமையான மாதிரி தமிழ்நாடு அ இ அதிமுக அரசை தன் விரலசைவில் நடத்தும் விதம்.

இந்து ராஷ்ட்ரா என்ற பெருங்கனவில் ‘பனியா இரட்டையர் பாஜகவும்’ , பார்ப்பன ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணையலாம். அதற்கு தாங்கள் மட்டுமே நிரந்தர ஆட்சியாளர்கள் என்ற பேராவல் இரட்டையர்க்கும், இந்துத்துவ ராஷ்ட்ரத் தலைமையை ஒரு பார்ப்பனரே ஏற்க வேண்டுமென்ற திட்டத்தை ஆர்எஸ்எஸ்ஸும் கொண்டிருக்கலாம். ஆனால் இந்து இந்தி இந்தியா என்ற கற்பிதம் அதன் காலடியில் போட்டு மிதித்துத் துவைத்து விடத் துடிக்கும் பன்மைத்துவக் கலாச்சார வெளி அவர்கள் கனவு காண்பது போல் அவ்வளவு பலவீனமானதில்லை. இந்து எனும் இருநூறு ஆண்டு கற்பிதத்திற்கு எதிராக மாநிலங்கள் எனும் வடிவில் கிளர்ந்து நிற்பது தமிழரது போன்ற பல்லாயிரமாண்டு பண்பாட்டு ஓர்மைகள். இந்திய வரலாறு குறித்த வாசிப்பு ஒன்றை தெளிவுபடுத்தும், அந்த நிலப்பரப்பின் பல்வேறு துண்டுகளில் பல்வேறு வடிவங்களில் பார்ப்பனிய பண்பாட்டு மேலாண்மைக்கெதிரான கிளர்ச்சிகள் நடந்தேறியிருக்கின்றன என்பது.

ஒரு புள்ளிவரை தேசியவாதம் என்ற கற்பிதம் வெற்றிக்கான பாதை வகுக்கலாம், ஆனால் பாஜக/ ஆர்எஸ்எஸ் ‘ஒற்றை’ இந்து இந்தி இந்தியா எனும் பாசிசமே அதன் இறுதி அழிவிற்கான ஆயுதமாகும் என்பதே உண்மை.

கட்டுரையாளர் குறிப்பு

வீ.எம்.எஸ்.சுபகுணராஜன் இந்திய ஒன்றிய அரசின் வருவாய் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். திராவிட இயக்க ஆய்வாளர் / எழுத்தாளர் . தமிழில் பெரியாரிய சிந்தனைகள் குறித்து எழுதி வருபவர். ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ பெரியாரின் சாதிச் சங்க மாநாடுகள் உரைத் தொகுப்பு நூலின் தொகுப்பாசிரியர், ‘சாதியும் நிலமும், காலனியமும், மூலதனமும்’, ‘சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும்’ நூல்களின் ஆசிரியர்.

செவ்வாய், 12 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon