உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ‘நம்பிக்கை’யும் சட்டத் தகுதியும்!

public

 

 எஸ்.வி.ராஜதுரை

 கடந்த நவம்பர் 9 அன்று,  பாபர் மசூதி தொடர்பான (இது இப்போது முதன்மை நீரோட்டச் சொல்லாடல்களின் மூலமாக ‘அயோத்தி விவகாரம்’ என்றாகிவிட்டது) இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அளித்த  ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ தீர்ப்பைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1024 பக்கங்கள் கொண்ட  அந்தத் தீர்ப்பைப் படித்து வருபவர்கள்,  உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் வரலாற்றில் முன்னுதாரணமற்ற  அம்சங்கள் அதில் இருப்பதைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

**நீதிபதிகள் ஆயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தால்…**

 ஒரு வழக்கை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்படும் ஆயத்தில் (Bench) உள்ள நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு இருக்குமானால், அதிலுள்ள பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக, வழக்கில்  சம்பந்தப்பட்ட தரப்பினர் எல்லோரையும் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். இதுதான் நீதியாக ஏற்றுக் கொள்ளப்படும். எனினும், கருத்து மாறுபாடு கொள்ளும் நீதிபதியின் தீர்ப்பு (dissenting judgment)  பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்போடு சேர்த்துப் பதிவு செய்யப்பட்டு ஒட்டுமொத்தத் தீர்ப்பாவணத்தின் பகுதியாக அமையும். இதுதான் வழக்கம். உச்ச நீதிமன்றம்  ஒரு  தீர்ப்பை அளித்தவுடனேயே, அதில் சொல்லப்பட்டவற்றிலுள்ள அம்சங்கள் அனைத்தும் காலாகாலத்துக்கோ, அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் எல்லா வழக்குகளுக்குமோ அப்படியே  பொருந்தும் என்றும் சொல்ல முடியாது. 

எடுத்துக்காட்டாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ‘தடா’ (அமர்வு ) நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற ஆயம் ஒருமனதாக நால்வருக்கு மரண தண்டனையை உறுதிப்படுத்தியது. ஆனால், அதற்கான காரணங்கள் என்று மூன்று நீதிபதிகள் கருதியவை தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்கை விசாரணை செய்த அதே ஆயத்தில்தான் அதற்குச் சில மாதங்களுக்கு முன்  இன்னொரு ‘தடா’ வழக்கில் அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்த கல்பனாநாத் ராயின் (அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; ஒன்றிய அரசாங்க அமைச்சராகவும் இருந்தவர்)  மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இரு வழக்குகளிலும் இந்த சாட்சியங்கள் சட்டப் பிரிவொன்றுக்கு அது கொடுத்த விளக்கங்கள் வெவ்வேறு விதமானவையாக இருந்தன.

அதேபோல, ‘அரிதினும் அரிதான வழக்குகளில்’ மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று இருந்தபோதிலும் ‘அரிதினும் அரிதான’ என்பதற்கான விளக்கம் நீதிபதிக்கு நீதிபதி மாறுபடுகிறது.

ஒரு குறிப்பிட்ட  வழக்கில் தீர்ப்புக் கூறுவதைப் பொறுத்தமட்டில் நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பானதே. எனினும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்புக்கு சிறுபான்மை நீதிபதியும்(களும்) கட்டுப்பட்டாக வேண்டும் என்றாலும், தான் வழங்க விரும்பிய தீர்ப்பை (dissenting judgement)  பதிவு செய்ய அவருக்கு உரிமை உண்டு.  உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் அந்த மாறுபடும் தீர்ப்பும் சேர்க்கப்பட்டிருக்கும்.

இந்திய அளவிலும் உலக அளவிலும்  சட்டம் பற்றிய புரிதல், அரசியல், சமூக, பண்பாட்டு, வரலாற்று மாற்றங்கள் நடைபெற்ற பிறகு இன்று  ஒரு குறிப்பிட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஒரு தீர்ப்பில் கூறப்பட்ட காரணங்களுக்கு மாறான காரணங்களைக் கூறி, எதிர்காலத்தில் வேறுவகையான  தீர்ப்புகளை இதே உச்ச நீதிமன்றம் வழங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சட்டப் புத்தகங்களில் உள்ளவற்றுக்கு உச்சநீதி மன்றம் என்ன விளக்கங்கள் கொடுக்கின்றதோ, அந்த விளக்கங்கள்தான் இந்தியாவிலுள்ள சட்டங்களாகின்றன.

**அண்மைக்கால எடுத்துக்காட்டுகள்** 

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்புகளோடு சேர்ந்து சிறுபான்மை நீதிபதிகளின் தீர்ப்பும் அவரவர்களுடைய கையொப்பங்களுடனும் பெயர்களுடனும் வெளியிடப்படுவதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் கூறலாம்:

1. அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை ‘ஆதார் அட்டை’ மீறுகிறதா என்ற வழக்கு. இதில் மேனாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஆயத்தின் பெரும்பான்மை நீதிபதிகள் ‘ஆதார் அட்டை’க்கு ஆதரவாகவும், நீதிபதி சந்திரசூட் வேறுவிதமாகவும் தீர்ப்புக் கூறினர். ஆதார் விவகாரம் நாடாளுமன்றத்தில் பண மசோதாவுடன் சேர்க்கப்பட்டதே தவறு என்று   நீதிபதி சந்திரசூட் கருத்துத் தெரிவித்தார். எனினும் அவருடைய மாறுபடும் தீர்ப்பும் இறுதித் தீர்ப்பு ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

2. சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், பெரும்பான்மை நீதிபதிகள் பெண்களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர். ஆனால் அந்த ஆயத்தில் இருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ரா, மதச்சார்பற்றதன்மை என்ற பெயரால் மத உணர்வுகளைப் புண்படுத்திவிடக் கூடாது என்று ஒரு மாறுபடும் தீர்ப்பை எழுதினார். இதுவும் பதிவாகியுள்ளது.

3. 2017இல் முத்தலாக் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பெரும்பான்மை நீதிபதிகள் அந்த வழக்கம் சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்தனர். அந்த ஆயத்தின் தலைவராக இருந்த மேனாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், முஸ்லிம்களின் மதப் பழக்க வழக்கங்களிலொன்றான அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதல்ல என்று தீர்ப்புக் கூறினார். அவரது தீர்ப்பு சிறுபான்மைத் தீர்ப்பாக இருந்தாலும் அதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளது,

**பாபர் மசூதி தீர்ப்பில் புதுமை**

 ஆனால், ‘ ‘பாபர் மசூதி’ வழக்கு ( மன்னிக்கவும், ‘அயோத்தி வழக்கு) தொடர்பான மேற்சொன்ன இறுதித்தீர்ப்பு ஏகமனதாக வழங்கப்பட்டிருந்தாலும், அந்தத் தீர்ப்புக்கு வந்ததற்கான காரணங்கள் என்று அந்த ஆயத்தில் இருந்த ஐந்து நீதிபதிகள் ஒவ்வொருவரும்  தனித்தனியாக  சட்ட விளக்கங்களைத் தராமல் இருப்பது நமது சிற்றறிவைப் பொறுத்தவரை உலகிலுள்ள ஜனநாயக நாடுகளிலுள்ள உச்ச நீதிமன்றங்கள் எதிலும்  இதுவரை காணப்படாத புதுமை. எல்லா நீதிபதிகளும் ‘அயோத்தி’ விஷயத்தில் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தாலும், ஐந்து பேரும் சேர்ந்து உட்கார்ந்து ஒரு தீர்ப்பை, ஒரேமாதிரியான மொழிநடையில்  எப்படி எழுதியிருக்க முடியும் என்று சட்ட வல்லுநர்கள் வியப்பு கொண்டுள்ளனர்.  ‘எல்லா சாலைகளும் ரோமுக்கே செல்கின்றன’ என்பது போல், எல்லா நீதிபதிகளும் ஒரே முடிவுக்குத்தான் வந்திருப்பார்கள் என்றாலும், அவர்களது பயண அனுபவங்களும் ஒரேமாதிரியாக இருப்பதுதான் மிகவும் ஆச்சரியம்.

’பாபர் மசூதி’ (மறுபடியும்  மன்னிக்கவும்) இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக  இந்துக்களின் ’மத நம்பிக்கை’ என்பதையும் ஒரு சிவில் வழக்கில் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சான்று என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதும்கூட முன்னுதாரணமற்ற விஷயம் என்று பலர் சொல்கின்றனர்.  உண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு சிவில் வழக்கில் புராணங்களையும் சாஸ்திரங்களையும் அவற்றுக்கு விளக்கம் கொடுக்கும் தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் பார்ப்பன அறிவாளிகளையும் துணைக்கு அழைத்ததற்கு  நம்மால் இன்னொரு எடுத்துக்காட்டைக் கூற முடியும்.

**அனைத்து சாதியினரும் அர்ச்சகர்**

தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களுக்குக் காட்டப்படும் பாரபட்சம், அவர்களின் இயலாமை முதலியவற்றைப் போக்குவதற்கான ஆலோசனைகளைக் கூற இந்திரா காந்தி தலைமையிலிருந்த ஒன்றிய அரசாங்கம், காலஞ்சென்ற இளையபெருமாள் அவர்களின் தலைமையில் ஓர் ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகளிலொன்று அனைத்து சாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்க வேண்டும் என்பதாகும். உண்மையில் இதுபோன்ற ஆலோசனையை அண்ணல் அம்பேத்கர் ‘ ஜாதியை ஒழித்துக்கட்டுதல்’ என்னும் தம் புகழ்பெற்ற உரையில் 1936ஆம் ஆண்டிலேயே கூறியிருந்தார்.  மார்க்ஸியவாதிகளுக்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது தலித்துகளுக்கு அம்பேத்கரின் உரை என்று பரவலாகக் கருதப்பட்டாலும், அந்த உரை சாதி இந்துக்களை விளித்துத்தான் எழுதப்பட்டிருக்கிறது. அந்த உரையில் அவர் கூறினார்:

“இந்துக்களிடையே அர்ச்சகர்கள் ஒழிக்கப்படுவது நலம். ஆனால், அது சாத்தியமில்லை என்றே  தோன்றுகின்றது. எனவே அர்ச்சகத் தொழில் பரம்பரைத் தொழிலாக இருப்பதையாவது ஒழிக்க வேண்டும். அர்ச்சகர் தொழிலுக்காண அரசு தேர்வு எழுதி சான்றிதழ் பெறாத எவரும் அர்ச்சகர் தொழில் செய்யக்கூடாது என்று சட்டமியற்ற வேண்டும்”.

ஒழுக்கக்கேடானவர்களும்கூட, அவர்கள் பார்ப்பன சாதியில் பிறந்தவர்களாக இருக்கின்ற ஒரே காரணத்தால் அர்ச்சகர்களாகவும் கோவில் கருவறைகளில் நுழைய முடிகிறவர்களாகவும் இருப்பதை அம்பேத்கர் சுட்டிக் காட்டினார்:

“அறிவு நிலையில் அர்ச்சகன் மூடனாக இருக்கலாம்.  உடல்நிலையில் மேக நோய், வெட்ட நோய் உள்ளவனாக இருக்கலாம். ஒழுக்கத்தில் சீரழிந்தவனாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்த அர்ச்சகன்  தூய்மையான சடங்குகளை நடத்தும் இந்துக் கோவில்கள் உள்ள மிகப் புனிதமான மூல ஸ்தானங்களில் நுழையவும், இந்துக் கடவுள்களை வனங்கவும் தகுதி படைத்தவனாக இருக்கிறான்…. இந்துக்களில் அர்ச்சகனாக இருக்க, அர்ச்சகர் சாதியில் பிறந்திருப்பதே போதுமானது என்ற நிலை இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது”

**கருணாநிதி கொண்டுவந்த சட்டத் திருத்தம்**

இதேபோன்ற  கருத்துகள் பெரியாராலும் பலமுறை சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தனக்கு பக்கபலமாகக் கொண்டு, 1971இல் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கம் ‘இந்து அறநிலையச் சட்டத்திற்கு’ இரு திருத்தங்களைக் கொண்டுள்ள சட்ட முன்வரைவைக் கொண்டு வந்து சட்டமன்றத்திலும் அப்போதிருந்த மேலவையிலும் (Legislative Assembly)  ஒரு மனதாக நிறைவேற்றியது. அந்த சட்ட முன்வரைவு மாநில ஆளுநரால் ஒப்புதலளிக்கப்பட்டு சட்டமாகியது.  அரசாங்கத்தால்  நிர்வகிக்கப்படும் கோவில்களில் பாரம்பரியமாக  ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவதற்குப் பதிலாக, அந்தக் குடும்பத்தைச் சேராத எவரையும், ஆகம நெறிகள் முதலியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் என்ற தகுதியின் அடிப்படையில், அர்ச்சகராக நியமிக்கலாம் என்பது மேற்சொன்ன திருத்தங்களிலொன்றாகும் (  பாரம்பரிய அர்ச்சகர் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாமல் போகலாம், அல்லது  அந்தக் குடும்பத்தில் பிறந்த ஆண்பிள்ளைகள் படித்துவிட்டு வேறு வேலைக்குப் போய்விடலாம் என்பன போன்றவை இந்த சட்டத் திருத்தத்திற்கான காரணங்கள்.)

இன்னொரு சட்டத் திருத்தம், அர்ச்சகராகவதற்கான மேற்சொன்ன தகுதிகள் உடையவர் எந்த சாதியைச் சேர்ந்தவரானாலும் அவரை அர்ச்சகராக்கலாம் என்பதாகும். இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து பார்ப்பன மதத்தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, தங்களுக்காக வழக்காட அப்போது மிகவும் புகழ்பெற்றிருந்த பம்பாய் வழக்குரைஞர் நானி பல்கிவாலாவை அமர்த்தினர். 

**உச்ச நீதிமன்றத்தில் அனுஷ்டானங்கள்**

 உச்ச நீதிமன்றம்,  முதல் சட்டத் திருத்தம் அரசியலைப்புச் சட்டத்திற்கு முரணானதல்ல, அது ‘உலகியல் சார்ந்த விஷயம்’ என்று ஏற்றுக் கொண்டது. ஆனால், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குதல் (அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருந்தாலும்கூட) என்பது மத விஷயத்தில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று கூறும் அரசமைப்புச் சட்ட விதிகள் 25,26ஆகியவற்றை மீறுகிறது என்று கூறி அதனை இரத்து செய்துவிட்டது.

 உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் (AIR, 1972,1586 S.C.) கூறியதாவது:

“ அரசியல் சட்டப் பிரிவுகள் 25, 26 ஆகியன தரும் பாதுகாப்பு என்பது நெறி (doctrine ), நம்பிக்கை (belief ) ஆகியவற்றுடன் மட்டும் நின்று கொள்வதில்லை. அவை ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளுக்கும் (acts) விரிவுபடுத்தப்படக்கூடியவையாகும். எனவே, மதத்தின் பிரிக்க முடியாத அம்சங்களான சடங்குகள், சாக்கியங்கள், அனுஷ்டானங்கள், கொண்டாட்டங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றுக்கான உத்தரவாதத்தையும் அவை உள்ளடக்கியுள்ளன. ஒரு மதத்தின் அல்லது ஒரு மத நடைமுறையின்  ( practice) இன்றியமையாத பகுதி என்ன என்பதை நீதிமன்றங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதாவது அக்குறிப்பிட்ட மதத்தின் நெறி, குறிப்பிட்ட சமூகத்தினர் தமது மதத்தின் பகுதியாகக் கருத்தும் நடைமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் நீதிமன்றங்கள் மேற்சொன்ன விஷயத்தை முடிவு செய்யவேண்டும்”.

**தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட ஆகமங்கள்**

என்னென்ன விஷயங்களையெல்லாம் நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை உச்சநீதி மன்றத்தின் பத்தாம் பத்தி விரிவாக எடுத்துரைத்தது.

 விக்கிரகங்களைச் செய்தல், அவற்றை நடுதல், வழிபடுதல் முதலானவற்றைப் பொறுத்தவரை இறுதி அதிகாரம், ஆகமங்களுக்குத்தான் உண்டு என்று ஏற்கெனவே நீதிமன்றத் தீர்ப்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், இந்த ஆகம நெறிகள்தான் சிலை எப்போது தீட்டுப்படுகின்றது, எப்போது தீட்டுப்படுவதில்லை என்பதைச் சொல்கின்றன என்றும்,  சிலை தீட்டுப்படும்போது அச்சிலையிலிருந்த தெய்வம் மறைந்து விடுகிறது அல்லது அச்சிலையைத் தெய்வம் தன் உறைவிடமாகக் கொள்வதில்லை என்றும் கருதுவது இந்து வழிபாட்டாளனுடைய மத நம்பிக்கையின் பிரிக்க முடியாத பகுதி என்றும் அத் தீர்ப்புக் கூறியது: 

”வழிபாடு செய்கிறவர்களின் உள்ளத்தில் மேலோங்கியுள்ள கருத்து என்னவெனில், மரபான விதிகளிலிருந்து வழுவுதல் என்பது விக்கிரகம் தீட்டுப்படுவதற்கோ களங்கப்படுவதற்கோ இட்டுச் செல்லும் என்பதும், இதை எந்த விலையேனும் கொடுத்துத் தடுக்கவேண்டும் என்பதுதான். கருவறையின் புனிதத்தன்மையைக் காப்பாற்றுவதற்கான நியாயம் இதுதான். விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள எல்லாக் கோவில்களிலும் ஆகமவிதிகளால்  தன் மீது திணிக்கப்பட்டுள்ள அன்றாட ஒழுக்கங்களைக் கடைப்பிடித்த பிறகே தகுதியுள்ள அர்ச்சகனோ, பூஜாரியோ கர்ப்பக்கிரகத்தில்  நுழையலாம் என்று ஆகமங்கள் விதி செய்துள்ளன. அர்ச்சகன் என்ற முறையில் வழிபாட்டின் போது அவன் சிலையைத் தொட வேண்டியுள்ளது. அதைத் தொடுவது அவனுக்கு மட்டுமே உள்ள உரிமையும் கடமையுமாகும். வேறு யார் தொட்டாலும் சிலை தீட்டுப்பட்டுவிடும்”.

சைவர்கள் கோவில்களில் வைணவர்களோ, வைணவர்கள் கோவில்களில் சைவர்களோ அர்ச்சகர்களாகிவிட முடியாது என்றும், அர்ச்சகர்களாகத் தகுதி பெற்றவர்கள் என ஆகமங்களால் ஒப்புதல் தரப்பட்டவர்களைத் தவிர, வேறு யாருக்குமே – அவர்கள் பார்ப்பனர்களாகவோ, மடாதிபதிகளாகவோ, ஆச்சாரியார்கள் போன்ற மதத்தலைவர்களாகவோ இருக்கலாம் – சிலையைத் தொடும் அதிகாரம் இல்லை என்று கூறும் ஆகமங்களின் இறுதி அதிகாரத்தைச் சுட்டிக் காட்டிய உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பின் 11ஆம் பத்தியில் கூறியது:

“ ஆகமங்களால் அதிகாரமளிக்கப்படாத அர்ச்சகர்களால் விக்கிரகம் தீட்டுப்படவோ, களங்கப்படவோ அனுமதிக்கும் அரசாங்க நடவடிக்கை, ஜீவநாடி போன்ற விஷயத்தில் இந்து வழிபாட்டாளர்களின் சமய நம்பிக்கையிலும் நடைமுறைகளிலும் கடுமையாகக் குறுக்கிடுகிறது, எனவே பூர்வாங்க விசாரணையிலேயே, அது அரசமைப்புச் சட்டம் 35ஆம் பிரிவின்படியே அது செல்லத்தகாததாகி விடுகிறது”.

உச்சநீதிமன்றத்தின் கருத்துகள் பழைமைவாதக் கண்ணோட்டம் கொண்டிருந்தாலும்,   அர்ச்சகர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதல்ல, அவர் ஆகம விதிகளின்படி ஒழுகின்றாரா என்பதைத்தான் அது அளவுகோலாகக் கொண்டிருந்தன என்று  நாம் நினைக்கலாம். ஆகமவிதிகளின்படி மட்டுமே ஒருவரை அர்ச்சகராக்க முடியும்; அந்த விதிகளின்படி அர்ச்சகராக்கப்பட்டவரைத் தவிர வேறு எவரையும் – அவர் பார்ப்பனராக இருந்தாலும் சரி, மடாதிபதியாகவோ சங்கராச்சாரியாராகவோ இருந்தாலும் சரி –அர்ச்சகராக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறுவதை வைத்துக் கொண்டும், மேற்சொன்ன விதி 12இல் குறிப்பிட்டுள்ள தகுதியைக் கொண்டும் இங்கு பார்ப்பனர்களுக்குத் தனிச் சலுகை தரப்படவில்லையே என்று ஒருவர் வாதிடலாம். ஆனால் உண்மை என்ன? ஆகமங்களோ, அவற்றின் நியதிகளைப் பின்பற்றும் பார்ப்பனரல்லாதவரை – வேதங்கள், மந்திரங்கள், பிரபந்தங்கள் ஆகியவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்த பார்ப்பனரல்லாதோரை – அர்ச்சகராக்க அனுமதிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, ‘புனர்பிரதிஷ்டை’ ( கோவில்களில்  பூஜைக்கான  சிலைகளை மீண்டும் நடுதல்) குறித்து ‘ பிரம்ம புராணம்’ சொல்வது என்ன என்பதை விளக்கி மராத்தியப் பார்ப்பன அறிஞர் டாக்டர் கானெ எழுதிய ‘தர்ம சாஸ்திரங்களின் வரலாறு’ (The History of the Dharma Shastras  ) என்னும் நூலில் உள்ள பகுதியை உச்சநீதிமன்றத் தீர்ப்பு மேற்கோள் காட்டியது:

”பிரம்ம புராணம் கூறுவதாவது: ஒரு விக்கிரகம் இரண்டாக உடைக்கப்பட்டாலோ, துண்டு துண்டாகச் சிதறிவிட்டாலோ, எரிக்கப்பட்டலோ, அதனுடைய பீடத்திலிருந்து அகற்றப்பட்டாலோ, தூஷணை செய்யப்பட்டாலோ, வழிபடப்படாமல் போய்விட்டாலோ, கழுதைகள் போன்ற விலங்குகளால் தீண்டப்பட்டாலோ, தீட்டுப்பட்ட நிலத்தில் விழுந்துவிட்டாலோ, பிற தெய்வங்களுக்குரிய மந்திரங்களால் வழிபடப்பட்டாலோ, புற சாதிகளால் தீண்டப்பட்டாலோ  –  இந்தப் பத்து விஷயங்களில் ஏதேனுமொன்று நிகழ்கையில் தெய்வம் அந்த விக்கிரகத்தில் குடியிருக்காமல் போய்விடும்”

ஒரு  கடவுள் சிலை தீட்டுப்பட்டுவிடுவதற்கான காரணிகளில் கழுதையையும் புறசாதியினரையும் (பார்ப்பனரல்லாதோரையும்) ஒன்றாகக் கருதுவதுதான் ‘தர்ம சாஸ்திரங்கள்’. 

ஆக, இந்ததுகளின் பாரம்பரியம், அனுஷ்டானம் சடங்காச்சாரம், சிலை வழிபாடு ஆகியவற்றுக்கான நியதிகள் என்று  உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டவை பார்ப்பன நியதிகளே.  பார்ப்பனர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே பார்ப்பனரல்லாதவர்கள் –அவர்கள் எவ்வளவு இறைபக்தியோ, மறைஞானமோ கொண்டிருந்தாலும் – இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

ஆகம விதிகளுக்கோ, 1972ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் அவை பற்றிக் கூறியிருந்த கருத்துகளுக்கோ  தாங்கள் எவ்வகையிலும் கட்டுப்பட்டவர்கள் அல்லர் என்று கருதுபவர்களால் கட்டப்பட்டவைதான் சென்னையிலுள்ள  சிவ –விஷ்ணு’ கோவில்கள் போன்றவை.

’நாத்தழும்பில்லாமல் நாத்திகம் பேசியவன்’ என்று பெரியாரை இகழ்ந்துரைக்கும் சூத்திர இந்துக்கள், அவர்களுடைய சுயமரியாதைக்காகத்தான், அவர்களும் பிறப்பாலும் வாழும் வாழ்க்கையாலும் பார்ப்பனர்களுக்கு சமமானவர்கள் என்பதை நிலைநிறுத்துவதற்குத்தான் கடைசிவரை போராடினார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  பார்ப்பனரல்லாதவர்கள் அனைவரையும் சட்டப்படியும் சாஸ்திரப்படியும் ‘வேசி மக்களாக’, ‘பஞ்சமர்களாக’ வைத்திருக்கும் இழிநிலையைப் போக்குவதற்குத்தான், அந்த இழிநிலையை நியாயப்படுத்தி வந்த சாஸ்திரங்களையும் புராணங்களையும் அவற்றில் சொல்லப்படும்  கடவுள்களையும் எதிர்த்து வந்தார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

**எம்ஜிஆர் அமைத்த மகராசன் ஆணையம்**

உச்ச நீதிமன்றம்   உருவாக்கிய சிக்கல்களைக் கடந்துவருவதற்காக, மு.கருணாநிதி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைளைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம் 1975இல் அவசரநிலையின் போது அந்த அரசாங்கம் கலைக்கப்பட்டதுதான். அவசரநிலை முடிந்த பின் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். தலைமையில் அமைக்கப்பட்ட அஇஅதிமுக அரசாங்கம், அரசமைப்புப் பிரிவு 25, 26ஆகியவற்றுக்குத் திருத்தங்கள் கொண்டு வந்தாலொழிய அர்ச்சகர் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி மகராசன் தலைமையில் ஓர் ஆணையத்தை நியமித்தது. அதற்கு காஞ்சி சங்கர மடத்தைத் தவிர மற்ற எல்லா இந்து மத  நிறுவனங்களும் மடாதிபதிகளும் ஒத்துழைப்புத் தந்தனர். ஆனால், எம்.ஜி.ஆர், உடல் நலம் குன்றி, பின்னர் இறந்துவிடவே, அவரால் மகராசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி நடவடிககை எடுக்க  முடியவில்லை.  அதன் பிறகு மூன்று முறை ஆட்சிக்கு வந்த திமுக மேற்கொண்ட முயற்சிகளுக்கு உச்சநீதிமன்றமும்  இந்துப் பிற்போக்கு சக்திகளும்  முட்டுக்கட்டையிட்டு வந்தன.  எனினும் மு.கருணாநிதி அரசாங்கத்தின் கீழ் இருநூறுக்கும் மேற்பட்ட, பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்  ஆகம முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவர்கூட ஜெயலலிதாவின் ஆட்சிக் காலங்களில் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை; அதுமட்டுமல்ல, கோவில்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஆகமங்களுக்குச் சிறிதும் சம்பந்தமற்ற வேதங்களைக் கற்றுக் கொடுப்பதற்காக வேத பாடசாலைகள் தொடங்கப்பட்டன.  ஆனால் அத்தகைய ஜெயலலிதாவும்கூட தான் சொற்பொழிவுகள் ஆற்றும் மேடைகளில் பெரியார் படங்கள்  இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.  ஆனல் அவை ’தங்கத் தமிழர்களின்’ மேடைகளில் காணாமல் போய்விட்டன.  

**சட்ட அந்தஸ்து பெற்ற புராணங்கள்**

இது ஒருபுறமிருக்க,  நவம்பர் 9ஆம் தேதிய ‘அயோத்தி’  தீர்ப்பின் இணைப்பாக (addendum)  சேர்க்கப்பட்டுள்ள ஓர் ஆவணத்தையும் அந்த ஆவணத்தை எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படாததையும் சட்ட வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தத் தீர்ப்பின் முக்கிய பகுதியில் பின்வரும் கருத்து சொல்லப்படுகின்றது :  ’இந்தத் தீர்ப்பு ஒருமனதாகச்  சொல்லப்படுவது என்றாலும், தாவாவிலுள்ள கட்டடம் இந்து பக்தர்களின் நம்பிக்கையின்படி இராம பிரான் பிறந்த இடமா என்பது தொடர்பாக  இந்த ஐந்து நீதிபதிகளிலொருவர் விளக்கிக்கூறியுள்ள வேறு காரணங்கள்  இந்த இணைப்பில்  உள்ளன’. 

 ’அயோத்யா’ வழக்கில் இந்துக்களின் சார்பில் சாட்சியமளித்தவர்களில் சிலர்  ‘பாபர் மசூதி’ கட்டப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்குச் சான்றாக, பிர்ஹட்தர்மோத்ர புராணம், ஸ்கந்த புராணம் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியதையும்,  சீக்கியப் புனித நூல்கள், 150-11இல் ( அதாவது  பாபர் படையெடுத்து வருவதற்கு முன்) ‘ராமஜென்ம பூமி’க்கு வருகை தந்ததாகக் கூறியதையும்  இந்த இணைப்பு பதிவு செய்துள்ளது.

‘இந்துக்களின் நம்பிக்கை’ சட்டத் தகுதி பெற்றுவிட்டதால், வரலாறு, அறிவியல்  முதலிய தொடர்பாக சங் பரிவாரத்தினர் கூறி வரும் கருத்துகளும்கூட இனி வலுப்பெறத் தொடங்கிவிடும்.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 51இல் உட்பிரிவு (h), மக்களிடையே விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு என்று வலியுறுத்துவது  ‘ நம்பிக்கை’ சம்பந்தமில்லாத வேறு  விஷயம் என்பதால் அதைப் பற்றி இங்கு இப்போது பேச முடியாது!

**கட்டுரையாளர் குறிப்பு**

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *