மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி-   தினகரனுக்கு சசிகலா பச்சைக் கொடி! 

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி-   தினகரனுக்கு சசிகலா பச்சைக் கொடி! 

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.  

 “உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக பணிகளில் இறங்கிவிட்ட நிலையில், அமமுக நிர்வாகிகள் குழம்பிப் போயிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன.  அமமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொள்வதும்,   மாவட்டச் செயலாளர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகளும் தங்கள் அளவில் தேர்தலில் கட்சியின் நிலை பற்றி பேசிக்கொண்டிருப்பதுமாக  இருந்தனர்.

இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் நவம்பர் 13 ஆம் தேதி பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்.  தினகரனோடு  டாக்டர் வெங்கடேஷ், பழனிவேலு (நடராஜனின் அண்ணன்) விவேக், ஷகிலா , பெருமாள்  (திருபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.,ஏ.),  கார்த்திகேயன் (சசிகலா உறவினர்) தேவாதி பட்டர், சசிகலா உறவினர் சரவணன், கொடநாடு மேனேஜர் நடராஜன், சசிகலாவின் சிறப்பு சமையல்காரர் சேகர், சசிகலாவின் பி.ஏ. கார்த்திகேயன் ஆகியோர் மதியம் ஒரு மணிக்கு உள்ளே சென்றனர். 

கார்த்திகேயன், சேகர், போன்றவர்கள் சசிகலாவுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றனர். சசிகலாவை சந்தித்து இருபது நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார் தினகரன்.

சந்திப்பு முடிந்ததும் விறுவிறுவென காரில் ஏறி தான் தங்கியிருக்கும்  கிருஷ்ணகிரி அருகே உள்ள சூலகிரி எஸ்டேட்டுக்கு  சென்றுவிட்டார். அங்கே பழனியப்பன் வீட்டில் இருந்து வந்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு, உடனடியாக சென்னை புறப்பட்டுவிட்டார். தினகரனோடு காரில் சென்ற அவரது பி.ஏ. செல்லப்பாண்டியனையும் சூலகிரியிலேயே விட்டுவிட்டு போய்விட்டார் தினகரன். அப்புறம் அவர் இன்னொரு காரில் சென்று பாதி வழியில் தினகரனுடன் சேர்ந்துகொண்டார்.  

சசிகலாவுடன் தினகரன் பேசியது என்ன என்று அமமுக உயர் வட்டாரத்தில் விசாரித்தபோது  தினகரன் உற்சாகமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சிறையில் சசிகலாவிடம் டிடிவி பேசும்போது, ‘ஜெயா டிவியில் எடப்பாடி அரசின்  செய்திகள் வர வர அதிகமாகிவிட்டன.  அது  நம்ம டிவியா எடப்பாடி டிவியா?’ என்று கேட்டிருக்கிறார்.  ‘அதை நான் பாத்துக்கறேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறார் சசிகலா. அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பேச்சு வந்திருக்கிறது.  “எடப்பாடி சில நாளாகவே நம்ம கட்சியைப் பத்தி ஏடாகூடமா பேசிக்கிட்டிருக்காரு. இதை ஒரு கட்சியாகவே கருதலைனு சொல்றாரு. எம்பி தேர்தல்ல நாம எலலா தொகுதியிலயும்  போட்டியிட்டதால நம்மோட அருமை அவருக்குப் புரிஞ்சது.  இரண்டு இடைத்தேர்தல்ல நாம போட்டியிடாததால நம்ம அருமை அவருக்கு மறந்துடுச்சு. அதனாலதான் கண்டபடி விமர்சிக்கிறாரு. வர்ற உள்ளாட்சித் தேர்தல்ல போட்டியிட  நம்ம நிர்வாகிகள் தயாரா இருக்காங்க.  உள்ளாட்சித் தேர்தல்ல போட்டி போட்டு எம்பி தேர்தல் மாதிரியே அவங்களை தோற்கடிக்கணும். நாம ஜெயிக்குற பல பகுதிகள் இருக்கு’ என்று சசிகலாவிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் தினகரன். 

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட சசிகலா, ‘உள்ளாட்சித் தேர்தல்ல அதிமுக வேட்பாளர்களுக்கு டஃப் பைட் கொடுக்கற மாதிரி வேட்பாளர்களை நிறுத்து. என்ன பட்ஜெட் ஆகும்? அதுபத்தியெல்லாம்  சொல்லு’ என்று  உள்ளாட்சித் தேர்தல் பட்ஜெட் விஷயங்கள் பற்றிக் கேட்டிருக்கிறார். இந்த உற்சாகத்தில்தான் தினகரன் சிறையில் இருந்து புறப்பட்டிருக்கிறார்.

தினகரனுக்குப் பின் விவேக்  சசிகலாவை சந்தித்தார். ஜெயா டிவி நிகழ்ச்சிகள் பற்றியும் அவரிடம் பேசிய சசிகலா, உள்ளாட்சித் தேர்தல் பட்ஜெட் பற்றியும் பேசியிருக்கிறார். 

 இந்த நிலையில் அமமுகவினருக்கு தலைமையகத்தில் இருந்து அனைத்து மாவட்டத்திலும் 15 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வேட்பாளர்கள் பட்டியலைத் தயாரிக்க வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க அமமுக தயாராகி வருகிறது. இதனால் திமுக குஷியாக அதிமுகவோ யோசித்துக் கொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வெள்ளி, 15 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon