மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

எடப்பாடி விட்ட தூது: திருச்சியில் வெளியிடும் தினகரன்

எடப்பாடி விட்ட தூது: திருச்சியில் வெளியிடும்  தினகரன்

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுமா போட்டியிடாதா என்ற குழப்பத்துக்கு விடை தரும் விதமாக உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அமமுகவின் ஆலோசனைக் கூட்டத்தை 22 ஆம் தேதி திருச்சியில் கூட்டுவதாக அறிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

நவம்பர் 13 ஆம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து தினகரன் நடத்திய ஆலோசனை தொடர்பாக, உள்ளாட்சி: தினகரனுக்கு பச்சைக் கொடி காட்டிய சசிகலாஎன்ற தலைப்பில் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அமமுகவின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களை தேர்வு செய்யுமாறு போன் மூலம் உத்தரவு பறந்தது. இதையடுத்து 15 ஆம் தேதி தர்மபுரியில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘ பழனியப்பன் தான் அதிமுகவுக்கு தூதுவிட்டார்’ என்று முதல்வர் எடப்பாடி பேசியதற்கு கடுமையாக பதிலளித்தார் பழனியப்பன். அதுபற்றி வரலட்சுமி மில் ஓனரை தூதுவிட்டது யார்? எடப்பாடி மீது பாய்ந்த பழனியப்பன்என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

நேற்று மாலை அமமுகவின் சென்னை மண்டலப் பொறுப்பாளர் வெற்றிவேல் தன் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசித்து, உடனடியாக மாவட்டம் தோறும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்துமாறு கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி ஃபெமினா ஓட்டல் காவிரி அரங்கில் 22 ஆம் தேதி நடக்க இருக்கிறது” என்று அமமுக தலைமைக் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

“பழனியப்பன் ஏற்கனவே எடப்பாடி தன்னை யார் யார் மூலமாக அணுகினார் என்பதையெல்லாம் தர்மபுரி கூட்டத்தில் போட்டு உடைத்துவிட்டார். பழனியப்பன் லெவலில் இந்த தூதுகள் என்றால் தனக்கு எடப்பாடி யார் யார் மூலமாக தூதுவிட்டார் என்பதையெல்லாம் திருச்சியில் நடைபெறப் போகும் கூட்டத்தில் டிடிவி வெளிப்படையாக போட்டு உடைக்கப் போகிறார்.

கடந்த சில தினங்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளுக்கு தினகரன் விரிவான விளக்கம் அளிக்கவில்லை. தனக்கும் சசிகலாவுக்கும் எடப்பாடி பழனிசாமி யார் யார் மூலமாக எப்போது தூது விட்டார் என்பதை சொல்லி எடப்பாடிக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார் தினகரன்” என்கிறார்கள் அமமுகவின் தலைமைப் பிரமுகர்கள்.

சனி, 16 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon