மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

ஆங்கிலப் பள்ளி, கார், ஐரோப்பிய சந்தை: அசத்தும் பழங்குடியின மக்கள்!

ஆங்கிலப் பள்ளி, கார், ஐரோப்பிய சந்தை: அசத்தும் பழங்குடியின மக்கள்!

பழங்குடியினர் மற்றும் மலைவாள் பகுதி மக்களின் பிள்ளைகள் என்றாலே , குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களுக்காகப் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, கிழங்கு எடுத்தல் உள்ளிட்ட வேலைக்குச் செல்வார்கள் என்ற தோற்றமே பொதுவாக உண்டு. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த பழங்குடியினர் கிராமம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மஞ்சுமலை பகுதியில் உள்ளது வஞ்சிவயல் கிராமம். இங்குள்ள பழங்குடியின விவசாயிகள் மிளகு மற்றும் காபி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு ரூ.4 முதல் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் இரு சக்கர வாகனம் அல்லது கார் வைத்திருக்கிறது. அவர்களின் குழந்தைகள் ஆங்கில பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இளைஞர்கள் பொறியியல் பட்டதாரிகளாகவும், அரசு ஊழியர்களாகவும் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர்.

மிளகு மற்றும் காபி சாகுபடியால் வரும் வருமானம் மூலம் தங்கள் பிள்ளைகளை இக்கிராமத்தினர் இவ்வாறு படிக்க வைக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இவர்கள் இந்த வேலையைச் செய்து வருகின்றனர். ஓராலி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பங்கள், பெரியார் புலி காப்பக மையப் பகுதியிலிருந்து 72 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இடம்மாற்றப்பட்டுள்ளனர்.

முதலில் மரவள்ளிக்கிழங்கு, நெல் மற்றும் தினை ஆகியவற்றைச் சாகுபடி செய்து வந்துள்ளனர். ஆனால் காட்டு விலங்குகளின் அட்டகாசத்தால், இதுபோன்ற உணவுப் பொருட்களை சாகுபடி செய்வதைக் கைவிட்டுள்ளனர்.

”அந்த சமயத்தில் மிளகு சாகுபடி செய்யுமாறு அப்பகுதியினருக்கு வனத்துறை ஊக்கமளித்தது. இந்த விளை நிலங்கள் காட்டுப்பகுதியில் இருப்பதால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு சாகுபடி செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டது. இதையடுத்து 40.2 ஹெக்டேர் நிலத்தில் சராசரியாக 25-30 டன் பச்சை மிளகு பயிரிடப்படுகிறது” என்று சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவின் செயலாக்குநர் செபாஸ்ட்டியன் தெரிவித்துள்ளார்.

”82 பழங்குடி குடும்பங்கள் இப்போது பயோடைனமிக் விவசாயத்திற்கு மாறிவிட்டன, இவற்றின் விளைபொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும் தேவை உள்ளது” என்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ரமணி தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமாக, ஆண்களை விட அதிகமான பழங்குடி பெண்களே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அதுவும், உயரமான கொடிகளிலிருந்து மிளகைப் பறிக்க 20 அடி ஏணியில் ஏறி பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ”மிளகு மூலம் கிடைக்கும் வருமானத்தினால் தான் எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வியை வழங்க முடிந்தது. எனது மூத்த மகள் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார், அதே நேரத்தில் எனது இளைய மகள் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப துறையில் பட்டம் பெறவிருக்கிறாள்” என்கிறார் ரமணி.

இந்த பழங்குடி சமூகம் இப்போது காட்டு மஞ்சள் மற்றும் இஞ்சியை ஏற்றுமதி செய்து, அதன் மூலம் தங்கள் பண்ணை விளைபொருட்களைப் பன்முகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ‘ஜெர்மனியிலிருந்து ஒரு ஆர்டரைப் பெற்றதையடுத்து, நாங்கள் 1600 கிலோ மஞ்சளை உற்பத்தி செய்துள்ளோம்’ என்று செபாஸ்ட்டியன் தெரிவித்துள்ளார்.

நன்றி : தி பிரிண்ட்

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon