மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

பெண்ணை தாக்கிய தீட்சிதரைக் காப்பாற்றுகிறதா காவல் துறை?

பெண்ணை தாக்கிய தீட்சிதரைக் காப்பாற்றுகிறதா காவல் துறை?

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர், சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணைத் தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த தீட்சிதர் தலைமறைவானார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் (நவம்பர் 16) மாலை 7.15 மணி அளவில் சிதம்பரத்தைச் சேர்ந்த, லதா (51) என்ற பெண் செவிலியர் தனது மகனின் பிறந்த நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள முக்குருணி பிள்ளையார் சந்நிதிக்குச் சென்றுள்ளார். அப்போது அர்ச்சனை செய்யாமலேயே தீட்சிதர் தர்ஷன், தேங்காய் உடைத்துக் கொடுத்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு லதாவைக் கன்னத்தில் அறைந்துள்ளார் அந்த தீட்சிதர். மேலும் தகாத வார்த்தைகளாலும் பேசியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட லதா சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் (குற்ற எண் 351/2019) தகாத வார்த்தைகளால் திட்டுதல், அடித்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தீட்சிதர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள தீட்சிதரைத் தேடி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், இது குறித்து விசாரித்ததில் அந்த தீட்சிதர் தலைமறைவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 7 .15 மணி அளவில் சம்பவம் நடைபெற்ற நிலையில், அந்த தீட்சிதர் 10 மணி வரை கோயிலிலேயே இருந்துள்ளார். 10 மணிக்குப் பிறகு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறை என்பதால் முன்ஜாமீன் பெற மனு அளிக்க முடியவில்லை. இதனால் இன்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முன்ஜாமீன் பெற தீட்சிதர் தரப்பில் திட்டமிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் கடலூர் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளராகப் பதவியேற்ற அபினவ் ஐபிஎஸ், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். சீருடையில் சென்றவர் கீழே அமர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார். இதன் பின்னரும் கோயிலில் நடைபெற்ற ஒரு விழாவின்போது கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அப்போதும் தீட்சிதர்கள் அவருக்கு சாமி தரிசனம் செய்து வைத்துள்ளனர். கடலூர் எஸ்பி சென்றுவரும் நடராஜர் கோயிலில்தான் தற்போது இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

நவீனமயமான தமிழக காவல் துறையினரால் தீட்சிதர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், தீவிரமாக தேடிவருகிறோம் என்று சொல்வதன் மூலம் காவல் துறை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறது என்கிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.

திங்கள், 18 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon