மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழப் பாசிப்பருப்பு பாயசம்

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழப் பாசிப்பருப்பு பாயசம்

ஐயப்ப சுவாமிக்கு மாலை அணியும் கார்த்திகை மாத விரத நாட்கள் தொடங்கிவிட்டது. பாயசன்னப் பிரியன் என்று வணங்கப்படும் ஹரிஹரசுதன் ஐயப்பனுக்குப் பிடித்தமான வாழைப்பழம் சேர்த்துச் செய்யப்படும் வாழைப்பழப் பாசிப்பருப்பு பாயசம் கார்த்திகை மாதம் முழுக்க நைவேத்தியம் செய்ய பயன்படுகிறது. மாலை அணிந்துகொண்டு விரதமிருக்கும் பக்தர்களின் படி பூஜை, இருமுடி பூஜைகளில் இந்தப் பாயசம் வெகு பிரசித்தம்.

என்ன தேவை?

சிறிய வாழைப்பழத் துண்டுகள் - ஒரு கப்

பாசிப்பருப்பு - ஒரு கப்

பால் - அரை கப்

கெட்டித் தேங்காய்ப்பால் - 2 கப்

வெல்லம் - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

முந்திரி, திராட்சை - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பைச் சுத்தம் செய்து நன்றாகக் குழைய வேகவைத்து மசித்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்தெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். மசித்த பாசிப்பருப்பில் வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். வாழைப்பழத் துண்டுகளை நெய்யில் நன்றாக வதக்கி கொதிக்கும் பாசிப்பருப்பு - வெல்லக்கரைசலில் போட்டுக் கிளறவும். இத்துடன் பால், தேங்காய்ப்பால் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். இறுதியாக ஏலக்காய்த்தூள், திராட்சை, வறுத்த முந்திரி சேர்த்து, ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்யவும். அனைவருக்கும் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: தினம் ஒரு முட்டை - நல்லதா? கெட்டதா?

ஞாயிறு, 17 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon