மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் ரஜினி; ஏற்பாரா கமல்?

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் ரஜினி; ஏற்பாரா கமல்?

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது வாட்ஸ் அப் ஆன்லைனில் இருந்தது.

“கமல்ஹாசனின் அறுபது ஆண்டு சினிமா வாழ்வை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்டத்தில் ஏராளமான பேர் கமல்ஹாசனை வாழ்த்திப் பேசினார்கள். அதில் ரஜினிகாந்த் கமல்ஹாசனை வாழ்த்தி பேசிவிட்டு, எடப்பாடி பற்றி சில வார்த்தைகள் பேச ஒட்டுமொத்த விழாவுக்கும் இதுவே செய்தி ஆகிப்போனது.

எடப்பாடி முதல்வரானது அதிசயம்; அவர் முதல்வராகத் தொடர்வதும் அதிசயம்; நாளைக்கும் ஒரு அதிசயம் நடக்கும் என்று ரஜினி சொல்ல, அதை வைத்து அனைத்து ஊடகங்களும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டன.

இதோடு ரஜினி கமல் ஆகிய இருவரும் இணைந்தால் அரசியலில் சாதிப்பது நிச்சயம். அதுவே தமிழகத்துக்கு நல்லது என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச, விவாதம் அடுத்த கட்டத்துக்கும் போய்விட்டது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்பத்தில் சினிமாவில் இணைந்து நடித்தார்கள். பின்பு அவர்களே தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இனி இணைந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துத் தனித்துக் களம் இறங்கினார்கள். அது சினிமா. காலம் இருவரையும் அரசியல் பக்கம் தள்ளியுள்ள நிலையில் இங்கும் அதே ஒப்பந்தம் கையாளப்படுமா அல்லது அந்த ஒப்பந்தம் கூட்டணி ஒப்பந்தமாக மாறுமா என்பதுதான் கேள்வி.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான சில மாதங்களில் ரஜினிகாந்த்தை அதிமுகவுக்குக் கொண்டுவர தீவிரமான சில முயற்சிகள் நடந்தன. ஐசரி கணேஷ், சைதை துரைசாமி, செங்கோட்டையன், தம்பிதுரை போன்ற மூத்த அதிமுக புள்ளிகள் ரஜினியைச் சந்தித்து அதிமுகவுக்கு ஒரு புதிய தலைமையை ஏற்கும்படியான பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி மெல்ல மெல்ல அதிமுகவில் தலையெடுக்கலாம் என்ற சூழலில் இந்தக் காய்கள் அப்போது நகர்த்தப்பட்டன. ஆனால் ரஜினி இதில் பிடிகொடுக்காமல் நழுவி விட்டார்.

இப்போது ரஜினியையும் கமலையும் அரசியல் ரீதியாக இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ஐசரி கணேஷ். இருவருக்கும் மிக நெருக்கமான ஐசரி கணேஷ் அரசியல் தளத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், வலதுசாரி இடதுசாரி என்ற பேதம் எதுவும் இல்லாமல் அனைத்து மக்களும் ரஜினி - கமல் கூட்டணியை நோக்கி வருவார்கள் என்றும் இருவரிடமும் பேசி வருகிறார்.

குறிப்பாக ரஜினி - கமல் இணைந்து அரசியலைச் சந்தித்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கமல் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து தேர்தலையே சந்தித்துவிட்டார். ஆனால், ரஜினி இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் கள அரசியலில் சீனியர் கமல்ஹாசன்தான். ஆனாலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் ஏற்பார் என்றும் அதற்குரிய பேச்சு வார்த்தைகளையும் காய்நகர்த்தல்களை ஐசரி கணேஷ் செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள் ரஜினி - கமல் வட்டாரத்தினர்” என்ற செய்திக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon