மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

சிங்கப்பூரிலிருந்து வந்தவர் சென்னையில் கடத்தல்: மீட்டது எப்படி?

சிங்கப்பூரிலிருந்து வந்தவர் சென்னையில் கடத்தல்: மீட்டது எப்படி?

சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த கடலூரைச் சேர்ந்த தணிகைவேல் கடத்தப்பட்ட நிலையில், துரிதமாகச் செயல்பட்டு அவரை மீட்டுள்ளனர் கடலூர் காவல் துறையினர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல். 26 வயதாகும் இவர் சிங்கப்பூரில் வேலை செய்துவந்தார். குருவி தொழில் செய்யக்கூடியவர்கள், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். அப்படித்தான் கடலூர் தணிகைவேலைக் குருவியாகப் பயன்படுத்தி, கடைசியில் ஆளையே கடத்திவிட்டார்கள்.

கடத்தியது எப்படி?

தணிகைவேல் சிங்கப்பூரிலிருந்து தமிழகத்துக்கு வருவதற்கு விமான டிக்கெட் புக்கிங் செய்திருக்கிறார். அதை மோப்பம் பிடித்த குருவி தொழில் செய்யக்கூடியவர்கள் (கடத்தல் செய்பவர்கள்) தணிகைவேலைச் சந்தித்து, ‘நாங்கள் செயின் ஒன்றை அளிக்கிறோம். அதைப் பத்திரமாக எடுத்துப்போய் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் எங்கள் ஆட்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், ‘உங்கள் தொடர்பு எண்ணும் புகைப்படமும் அவர்களிடம் அனுப்பிவிடுகிறோம். செயினை கொடுக்கும்போது அவர்கள் ரூ.7,000 கொடுப்பார்கள். சுங்கச் சோதனையில் மாட்டி வரிகட்டச் சொன்னால் மேலும் ரூ.3,000 கொடுப்பார்கள்’ என்று தெரிவித்து நவம்பர் 14ஆம் தேதி தணிகைவேலை சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் ஏற்றிவிடுகிறார்கள். நவம்பர் 15ஆம் தேதி காலை 3.00 மணிக்குச் சென்னை விமானம் நிலையத்துக்கு தணிகைவேல் வருகிறார்.

சிங்கப்பூரில் செயின் கொடுத்த நபர் தணிகைவேலுவை தொடர்புகொண்டு, ’பத்திரமாக சென்னை போயிட்டீங்களா. ஆட்கள் வெயிட் பண்றாங்க... அவங்ககிட்ட செயினைக் கொடுத்துட்டுப் பணத்தை வாங்கிக்கோங்க’ என்றதும், தணிகைவேல், ‘சாரி சார்,. சிங்கப்பூரில் ஸ்கேன் செய்யும்போது செயின் காணாமல் போய்விட்டது’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து, விமான நிலையத்திலிருந்த தனது ஆட்களிடம் சிங்கப்பூர் நபர் இந்தத் தகவலை சொல்லியிருக்கிறார்.

உடனே சென்னையைச் சேர்ந்த ஷாகுல், முகமது இப்ராகிம், அப்துல் ஹமீது, அப்துல் பாஷீத், ரகுமான் ஆகியோர் விமான நிலையத்துக்குச் சென்று தணிகைவேலுவிடம் பேசி காரில் ஏற்றிக்கொண்டு திருவல்லிக்கேணியிலுள்ள விடுதியில் அடைத்துவைத்து முழுவதுமாக சோதனையிட்டனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

வேறுவழி தெரியாமல் 7 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் செயினை மீட்க, கீரப்பாளையம் கிராமத்திலுள்ள தணிகைவேல் தந்தை கலியமூர்த்தி கைப்பேசி எண்ணை வாங்கி பேசுகிறார்கள். “உங்க மகன் எங்களை ஏமாற்றிவிட்டான். அவனை விடணும்னா ரூ.7 லட்சம் பணத்தை எடுத்துட்டு வாங்க. போலீஸுக்கு போனா உங்க மகனை உயிரோட பார்க்க முடியாது” என்று மிரட்டியுள்ளனர்.

பதறிப்போன கலியமூர்த்தி ஊரில் விவரம் தெரிந்த ஒருவரை அழைத்துக்கொண்டு நெல்லிக்குப்பம் காவல் துறை அதிகாரியைப் பார்த்து முறையிடுகிறார். அந்த அதிகாரியோ கடத்தப்பட்டது விமான நிலையம், அங்கே போய்தான் புகார் கொடுக்க வேண்டும் என்று தட்டிக்கழித்து விட்டார். உடனே மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் எம். ஶ்ரீஅபினவிடம் இதுதொடர்பாக கதறியபடி முறையிடுகிறார் கலியமூர்த்தி. எஸ்பி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணனை அழைத்து ஆலோசனை கேட்கிறார். அவர் டெல்டா டீமீடம் சொன்னால் சரியாகப் பிடித்து விடுவார்கள் என்கிறார். டெல்டா டீம் எஸ்ஐ நடராஜன் அவசரமாக அழைக்கப்படுகிறார். அவரோடு நெல்லிக்குப்பம் அதிகாரியும் டீமில் சேர்க்கப்படுகிறார்.

இதனையடுத்து, கடத்தப்பட்ட தணிகைவேல் தந்தை கலியமூர்த்தி, கடத்தல்காரரிடம் பேசவைக்கப்படுகிறார். “பணம் ரெடியா இருக்கு... எங்கே வந்து கொடுக்கணும்” என்று கலியமூர்த்தி கேட்க, எதிர்முனையில் பேசியவர் மீண்டும் உங்கள் லைனுக்கு வருகிறேன் என்று லைனைத் துண்டித்தார். பின்னர் கடலூரில் உள்ள தனது நண்பர் திருமலையைத் தொடர்புகொண்டு, “ஒரு பார்ட்டி இந்த இடத்தில் 7 லட்சம் பணம் கொடுப்பார். அதை வாங்கிட்டு பேசுங்கள்” என்று லைனைத் துண்டித்துள்ளார்.

கடத்தல் விவரங்கள் தெரியாத திருமலை பணம் வாங்க சென்றபோது போலீஸ் பின் தொடர்ந்துபோய் மடக்கிப் பிடித்தனர். திருமலையை விசாரித்தபோது, “எனக்கு எதுவும் தெரியாது சார். பணம் கொடுப்பார்கள், போய் வாங்கிவிட்டுப் பேசுங்கள்” என்று சொன்னார்கள் என்றதும், திருமலையை சென்னை பார்ட்டியிடம் தொடர்புகொண்டு பேச வைத்திருக்கிறார்கள்.

“பணம் வாங்கியாச்சு... நான்தான் கையில் வைத்திருக்கிறேன். நீங்கள் வாங்க” என்று திருமலை சொன்னதும், தணிகைவேலை கடத்தியவர்களான ஷாகுல், முகமது இப்ராஹிம், அப்துல் ஹமீது, அப்துல் பாஷீத், ரகுமான் ஆகியோர் சென்னையிலிருந்து கடலூர் நோக்கி வருகிறார்கள். அதற்கு முன்பாகவே தங்களது காரைக்கால், நாகை நண்பர்களைத் தொடர்புகொண்டு கடலூருக்கு வரச் சொல்கிறார்கள். அதன்படி, நாகப்பட்டினத்திலிருந்து நான்கு பேர் வருகிறார்கள். சினிமாவில் நடப்பதுபோல் போலீஸ் டீம் சைபர் க்ரைம் தொழில் நுட்பம் மூலமாக லொக்கஷேனை பார்த்துக் கண்காணித்தனர்.

சென்னையிலிருந்து வந்த ஆட்களைக் கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் பிடித்துவிடுகிறார்கள். நாகையிலிருந்து வந்தவர்களைக் கடலூர் பார்டரில் பிடித்துவிடுகிறார்கள். அவர்கள் மூலமாக தணிகைவேல் விடுவிக்கப்படுகிறார்.

புகார் ஏதும் இல்லாமல் பிடித்ததால் வழக்கை எப்படிப் பதிவு செய்வது என்று நினைத்த கடலூர் டீம், கலியமூர்த்தியைச் சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அனுப்பி புகார் கொடுக்க வைத்தது. கடலூரில் பிடிக்கப்பட்ட குற்றவாளிகள் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

செவ்வாய், 19 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon