மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

அரசு விழாவில் எடப்பாடியுடன் திருமாவளவன்

அரசு விழாவில் எடப்பாடியுடன் திருமாவளவன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 25 ஆம் தேதி கடலூரில் கட்டப்பட்டிருக்கும் ராமசாமி படையாச்சியார் நினைவு மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார். அதற்கான் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு இப்போது முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விழா அழைப்பிதழைப் பார்த்த அரசியல் வட்டாரத்தினர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். காரணம் என்ன? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் திறந்து வைக்கும் விழா அழைப்பிதழில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இது ஆச்சரியம். ஆனால் அதிமுகவின் தோழமைக் கட்சித் தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான அன்புமணி பெயர் இடம்பெறவில்லை. இது அதிர்ச்சி.

இதுதான் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ,.பன்னீர் செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எம்.சி. சம்பத், கே.பி. அன்பழகன், கே.சி. வீரமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு ஆகிய அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.

கடலூர் எம்பி என்ற வகையில் திமுக எம்பியான ரமேஷ் கலந்துகொள்கிறார். முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் வாழ்த்துரை என்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பெயர் இந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது. அதேநேரம் சட்டமன்றத்தில் ராமசாமிப் படையாச்சியார் படம் திறக்கப்பட்டபோது அழைக்கப்பட்ட பாமக எம்.பி. அன்புமணியின் பெயர் நிகழ்ச்சியின் அழைப்பிதழில் இடம்பெறவில்லை.

அண்மையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார் திருமாவளவன். அப்போது சென்னை மாநகராட்சியை தனி தொகுதி வரையறையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி நடக்க இருக்கும் கடலூர் ராமசாமிப் படையாச்சியார் மணிமண்டபத் திறப்பு விழாவில் திருமாவளவன் பெயர் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியின் தலைவரான திருமாவளவன் மேடையேறுவது ஒரு முக்கியத்துவம் என்றால், வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தின் மிகப் பெரிய ஆளுமையான ராமசாமிப் படையாச்சியாரின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பாமகவை எதிர்த்து கடுமையான கள அரசியல் செய்து வரும் திருமாவளவன் கலந்துகொள்வது இன்னொரு முக்கியத்துவமாகிறது. அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் இரட்டை முக்கியத்துவம் கொண்ட விழாவாக எதிர்பார்க்கப்படுகிறது இந்த விழா.

-ஆரா

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon