மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

பாவ-புண்ணியம்: துரைமுருகனுக்கு வந்த கோபம்!

பாவ-புண்ணியம்: துரைமுருகனுக்கு வந்த கோபம்!

தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

தென்காசி தனி மாவட்டத் துவக்க விழா இன்று (நவம்பர் 22) தென்காசியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அரசு மீது ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். நாங்கள் நன்றாக ஆட்சி செய்வது அவருக்கு பிடிக்கவில்லை. அவருக்கு எங்கள் கூட்டணியின் ஒற்றுமை பயமாக இருக்கிறது. அவர் அரசியலில் தனித்துவிடப்பட்டுவிட்டார். எங்கள் மீது அவதூறு பரப்பும் அவருக்கு எப்போதும் மன்னிப்பு கிடையாது. மக்கள் அவரை எப்போதும் மன்னிக்க மாட்டார்கள். அவரின் பொய்களுக்கு எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், “'புதிய வேடதாரியாக மாறிச் சாபம் விட்டுள்ளார் எடப்பாடி. அவர் இதுவரை செய்துள்ள பாவங்களைக் கழுவுவதற்கு எத்தனை அவதாரங்கள் எடுக்க வேண்டுமோ தெரியாது. சசிகலாவைக் கேட்டால்தான் தெரியும். இவர் எங்கள் தலைவருக்கு பாவமன்னிப்பு வழங்குவதற்குக் கிளம்பி உள்ளார்.

எடப்பாடியில் அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கொடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்குச் சூத்திரதாரிதான் இன்று முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி. இவர் வாயில் பாவ, புண்ணியம் போன்ற வார்த்தைகள் வரக்கூடாது. அதெல்லாம் பொதுவாழ்க்கையில் நேர்மையும், தூய்மையும் உண்மையும் உள்ளோர் பேச வேண்டிய பெரிய வார்த்தைகள். அதனைச் சொல்வதற்கு அருகதையற்றவர் எடப்பாடி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மறைமுகத் தேர்தலை ஸ்டாலின் தான் அறிமுகப்படுத்தினார் என முதல்வர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய துரைமுருகன், “ இது ஒன்றும் யாரும் கண்டுபிடிக்க முடியாத உண்மை அல்ல. சில நாட்களுக்கு முன்புவரை நேரடியாகத் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, இப்போது திடீரென்று தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன். உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டிய நெருக்கடி உருவானதும் திடீரென்று 'மறைமுகத் தேர்தல்' என்று முடிவெடுத்தீர்களே அதற்குள் இருக்கும் மர்மம் என்ன” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இந்த திடீர் ஞானோதயம், ஒருநாள் ராத்திரியில் உதயமானதற்கு என்ன காரணம்? தோல்வி பயம் தானே? இந்த அரசியல் உள்நோக்கத்தைத்தான் எங்கள் தலைவர் கேள்வி கேட்டார். “தோல்வி பயத்தால் மறைமுகத் தேர்தல் என்று முடிவெடுத்தீர்களா?” என்று திமுக தலைவர் கேட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல் மு.க.ஸ்டாலின் கூறுவது இருக்கின்றது, அவர்கள் செய்தால் தவறில்லை; நாங்கள் செய்தால் தவறா?” என்று கேட்டுள்ளார் பழனிசாமி. மொத்தத்தில் தான் எதையோ போட்டு உடைத்துவிட்டதாக எடப்பாடி ஒப்புக்கொண்டுள்ளார். எதையோ அல்ல; அவர் உடைத்துள்ளது ஜனநாயகத்தை” என்றும் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon