wஉள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்: முதல்வர்

public

யார் தடுத்தாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தின் துவக்க விழா இன்று (நவம்பர் 22) தென்காசியில் நடைபெற்றது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தின் 33வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.பின்னர் தென்காசியின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர்.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுவதற்குத் தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டது முதல் 1996ஆம் ஆண்டு வரை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறையே இருந்துவந்தது. ஆனால், கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 1996ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக ஸ்டாலின் வர வேண்டும் என்பதற்காக நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.

2006ஆம் ஆண்டு அதனை மாற்றியமைத்து மறைமுகத் தேர்தலை கொண்டுவந்ததும் திமுகதான். அதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து விளக்கம் அளித்தவர் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்” என்று விமர்சித்தார்.

“மீத்தேன், நீட் தேர்வு அனுமதி, ஜல்லிக்கட்டு தடை, ஸ்டெர்லைட், நியூட்ரினோ ஆய்வுக்கு அனுமதி என மக்கள் நலனுக்கு விரோதமான முடிவுகளுக்கு மத்தியில் அனுமதி தந்தது திமுக கூட்டணி அரசுதான். தற்போது அதனை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று எதிர்ப்பு நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டிய முதல்வர்,

“உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். தேர்தல் நடக்க வேண்டும் என்பதில் அதிமுக அரசுக்கு மாறுபட்ட கருத்தே இல்லை. வேன்றுமென்றே தவறான தகவல்களைப் பரப்பி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார். அது நிச்சயம் முடியாது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்த சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். எந்த முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது உறுதி. உச்ச நீதிமன்றம் அளிக்கும் அறிவுரையின் பேரில் மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும்” என்று கூட்டத்தில் பேசினார்.

இன்று காலை டிஜிட்டல் திண்ணை பகுதியில் [டார்கெட் பொதுச் செயலாளர்-எடப்பாடியின் ஏகன் பிளான்](https://minnambalam.com/k/2019/11/22/18/edapadi-palaniswamy-paln-to-capture-general-secretary-admk-o.panneer) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், உள்ளாட்சித் தேர்தலை உறுதியாக நடத்தி அதில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை தனது ஆதரவாளர்களையே நிர்வாகிகளாக வெற்றிபெறச் செய்து அவர்கள் மூலம் கட்சியைக் கைப்பற்றி அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் அமர்வதே எடப்பாடியின் திட்டம் என்பதை விரிவாக எடுத்துச் சொல்லியிருந்தோம்.

இன்று தென்காசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம் என்றும், எதிர்க்கட்சிகள்தான் நடத்தவிடாமல் சதி செய்கிறார்கள் என்றும் பேசியிருப்பது எடப்பாடியின் ‘ஏகன்’ பிளானை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *