மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

வெளிநாடு தப்பிச்சென்ற நித்யானந்தா: போலீஸ்!

வெளிநாடு தப்பிச்சென்ற நித்யானந்தா: போலீஸ்!வெற்றிநடை போடும் தமிழகம்

ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாக நித்யானந்தா மீது புகார் எழுந்துள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்று விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி நித்யானந்தா அகமதாபாத் ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாகக் கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்தனன் சர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆசிரம நிர்வாகிகள் இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். ஆசிரமத்தைச் சேர்ந்த சாத்வி பிரன்பிரியானந்தா மற்றும் பிரியாதத்வ ரிதி கிரண் ஆகிய இருவருக்கும் ஐந்து நாட்கள் காவல் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் புறநகர் எஸ்பி ஆர்.பி.அசாரி கூறுகையில், “நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார். தேவைப்பட்டால் முறையான நடவடிக்கைகள் எடுத்து நித்யானந்தாவைக் காவல் எடுத்து விசாரிப்போம். அவரே இந்தியா திரும்பினாலும் கட்டாயம் அவரை கைது செய்வோம்” என்றார். ஆனால், நித்யானந்தா பற்றிய முறையான தகவல்கள் மாநில அரசிடம் இருந்தோ, உள்துறை அமைச்சகத்திடம் இருந்தோ கிடைக்கவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாட்டில் உள்ள ஒருவரைக் காவலில் எடுப்பது தொடர்பாகக் கோரிக்கை எழுந்தால் அவர் எந்த நாட்டில் உள்ளார், எங்கு உள்ளார் என்ற தகவல்களை அளிக்க வேண்டுமெனவும் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் என்டிடிவியிடம் கூறியுள்ளார்.

குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சின்ஹ் ஜடேஜா கூறுகையில், “நித்யானந்தா ஆசிரம விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்டக் கண்காணிப்பாளருக்கு டிஜிபி அறிவுரைகள் வழங்கியுள்ளார். தனிக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

அகமதாபாத்தில் நித்யானந்தா ஆசிரமம் டெல்லி பப்ளிக் ஸகூல் வளாகத்தில் அமைந்துள்ளது. இதனால் நித்யானந்தா ஆசிரமத்துக்கு இடம் குத்தகைக்கு விட்ட பள்ளியின் நடவடிக்கை குறித்து விசாரிக்க குஜராத் மாநில பள்ளிக் கல்வி இயக்குநருக்கு மத்திய வாரிய இடைநிலைக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon