மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

மறைமுகத் தேர்தலால் குதிரை பேரமா? எடப்பாடி

மறைமுகத் தேர்தலால் குதிரை பேரமா? எடப்பாடி

மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு தமிழக அரசு அளித்த விளக்கத்தில் மேயரும், பெரும்பாலான கவுன்சிலர்களும் வேறு வேறு கட்சியாக இருப்பதால் நிர்வாகம் பாதிக்கப்படுகிறது என்றும், மறைமுகத் தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும் எனவும் தெரிவித்திருந்தது.

ஆனால், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மறைமுகத் தேர்தல் குதிரை பேரம் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும், நேரடித் தேர்தல் முறையிலேயே தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் வலியுறுத்தின. மறைமுகத் தேர்தலுக்காகப் போடப்பட்ட அவசரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று (நவம்பர் 21) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மறைமுகத் தேர்தலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததுதான் விந்தையாக இருக்கிறது. ஏனெனில் 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, மறைமுகத் தேர்தல் ஏன் கொண்டுவரப்படுகிறது என்பதற்கு சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். அன்றைய தினம் அவர் விளக்கமளித்தால் சரி. அதுவே நாங்கள் அதை நடைமுறைப்படுத்தினால் தவறா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் கவுன்சிலர்கள் மூலமாகத்தான் நடத்தப்படுகிறது. அதுபோலவே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள்தான் மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் என்ன குதிரை பேரமா நடைபெறுகிறது? அதற்கு ஒரு கருத்து, மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒரு கருத்து சொல்வதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் பதில்

இதற்குப் பதிலளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் முதல்வர். மறைமுகத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பினால், இது பற்றி மு.க.ஸ்டாலினே கேட்பது விந்தையாக இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார். கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பலவற்றை அம்மையார் ஜெயலலிதா மாற்றியதும், ஜெயலலிதா அம்மையார் நடைமுறைப்படுத்திய சிலவற்றை தலைவர் கலைஞர் ஆட்சியில் மாற்றியமைத்ததும் உண்டு. நிர்வாக வசதிக்காக அப்படி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் என அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முடிவையே மாற்றிக்கொண்டு, மறைமுகத் தேர்தலைக் கொண்டுவருவது ஏன்? இனி தேர்தலைத் தள்ளிப்போடும் சூழல் இருக்காது என நினைத்து, தேர்தலை எதிர்கொள்ளப் பயந்து, அதிகார அத்துமீறலுக்காகத் தனது முடிவையே மாற்றிக்கொண்டு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்தாரா?” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon