மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

ஐஐடி மாணவி பாத்திமா வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஐஐடி மாணவி பாத்திமா வழக்கு: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் 3 பேராசிரியர்கள் என குறிப்பு எழுதி வைத்துள்ளார். அவரது தந்தை அப்துல் லத்தீப் தனது மகள் மரணத்தில் பல சந்தேகம் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பியுள்ளார். தடயவியல் ஆய்வுக்காக பாத்திமா செல்போன் அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக மத்திய குற்றப் பிரிவு போலீசார் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியத் தேசிய மாணவர் சங்கத்தின் காங்கிரஸ் பிரிவு தாக்கல் செய்துள்ள மனுவில்."கடந்த ஓராண்டில் மட்டும் ஐஐடியில் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது பாத்திமா தற்கொலை குறித்து அவரது தந்தை பல கேள்விகளை எழுப்பியுள்ளார். போலீசார் விசாரணையில் நம்பிக்கை இல்லை. தனிப்படை போலீசார் முழுமையான விசாரணை மேற்கொண்டதாகக் கருதினாலும் பொதுமக்கள் மத்தியில் பாத்திமாவின் மரணம் குறித்துப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிபிஐ போன்ற சுதந்திரமான அமைப்பு விசாரித்தால் மட்டுமே இதில் இருக்கும் மர்மங்கள் வெளியே வரும். அதுவரை உண்மை வெளியே வராது. எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி அமர்வு முன்பு இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐயில் பணியாற்றிய அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon