மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

அதிமுகவுடன் கூட்டணியா? திருமாவளவன்

அதிமுகவுடன் கூட்டணியா? திருமாவளவன்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 17ஆம் தேதி திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். ஆதிதிராவிடர் மாணவர்களின் உதவித் தொகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து வலியுறுத்துவதற்காக சந்தித்ததாக விளக்கமும் அளித்திருந்தார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிற நிலையில் திமுக கூட்டணியின் முக்கியத் தலைவரான திருமாவளவன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம், திமுக கூட்டணியில் உள்ள விசிகவும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும், கூட்டணி மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு மறுப்பு எதுவும் கூறாமல், “அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்று தெரிவித்துவிட்டுச் சென்றார். மேலும், வரும் 25ஆம் தேதி கடலூரில் நடைபெறும் ராமசாமி படையாட்சியார் மணிமண்டப திறப்பு விழா அழைப்பிதழில் திருமாவளவன் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், பாமகவைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் அன்புமணியின் பெயர் இடம்பெறாததும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மதுரையில் இன்று (நவம்பர் 22) விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘ உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக-விசிக இடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையா அல்லது அதுபோன்ற எண்ணம் விசிகவுக்கு உள்ளதா’ என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த திருமாவளவன், “காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பரப்புகிற வதந்திதான் இது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நான் இப்போதுதான் பார்க்கிறேன் என சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 4 முறை அவரை சந்தித்துப் பேசியிருக்கிறேன். மக்கள் பிரச்சினை குறித்து பேசுவது ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் என்னுடைய கடமை.

போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை, மேலவளவு கொலையாளிகள் விடுதலை, உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரிடம் நான் பேசினேன். மற்றபடி அது அரசியல் சந்திப்பு அல்ல. அப்படி கூறுவது தவறான கருத்து” என்று விளக்கமளித்து கூட்டணி தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சனி, 23 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon