கட்சியை நல்ல கட்டுக்கோப்புடன் நடத்தும் திறமை சசிகலாவுக்கு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சசிகலா, கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நிலையில், சசிகலாவை விடுதலை செய்வதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 23) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம், சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “அதுகுறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. சசிகலா சிறைக்கு சென்றதில் என்னுடைய வழக்கும் இருந்தது. அவரின் தண்டனைக் காலம் முடிவதற்கு இன்னும், ஒரு வருடம் தான் இருக்கிறது. கட்சியை வழிநடத்தவும், நல்ல அமைப்புடன் நடத்துவதற்கான திறமையும் சசிகலாவிடம் உள்ளது. சிறையிலிருந்து விடுதலையானால் அதிமுகவினர் சசிகலா கட்சியில் தான் இணைவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று கருத்து தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என நீங்கள் கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, “சினிமா கூத்தாடிகளால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரத்திற்காக அவ்வாறு பேசலாம். அரசியலுக்கு வரப்போகிறேன், வரப்போகிறேன் என ரஜினி பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை” என்று பதிலளித்தார்.
ரஜினியும் கமலும் அரசியலில் இணைவதாகக் கூறியுள்ளனரே என்ற கேள்வியை செய்தியாளர் எழுப்ப, “சினிமா டயலாக்குகளைக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.