மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

ஆளுநர் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது- சரத் பவார்

 ஆளுநர் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது-  சரத் பவார்

துரோகி அஜித் பவார் ஒழிக, நம்பிக்கை துரோகி அஜித் பவார் ஒழிக என்று மும்பை ஒய்.பி. சவான் மையத்தில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்க சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அங்கே வந்தார். அவருக்குப் பின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோர் சவான் மையத்துக்கு வந்தனர். அவர்களை சுப்ரியா சுலே வரவேற்று அழைத்துச் சென்றார். சிறிது நேரத்துக்கெல்லாம் சரத் பவாரும் அங்கே வந்தார்.

சரத்பவாரும், உத்தவ் தாக்கரேவும் கூட்டாக அளித்த பேட்டியில்,

“ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் உள்ளனர். எங்களிடம் 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகையின் நடவடிக்கை எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அஜித் பவாரின் நடவடிக்கை கட்சிக்கு எதிரானது. எந்தக் காலத்திலும் தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி சேராது. உண்மையான தேசியவாத காங்கிரஸ் தொண்டன் பாஜகவை ஆதரிக்க மாட்டான். அஜித் பவாரோடு சேர்ந்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். அஜித் பவாரோடு சேரும் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் பாயும். அவர்கள் தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணரவேண்டும்” என்று கூறினார் சரத்பவார்.

தொடர்ந்து உத்தவ் தாக்கரே பேட்டியளித்தபோது, “பாஜக ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறது. அரசியல் அமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்.

சனி, 23 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon