அஜித் பவார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராகவும் இன்று காலை 8 மணிக்குப் பொறுப்பேற்றனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க இருந்த சூழலில், பாஜக ஆட்சியமைத்தது குழப்பத்தை உருவாக்கியது. ஆனால், அஜித் பவாருக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை என சரத் பவார் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நிலவிவரும் குழப்பமான அரசியல் சூழல் தொடர்பாக ஒய்.பி.சாவன் மையத்தில் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே கூட்டாகப் பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய சரத் பவார், “அஜித் பவார் மீது கட்சி விதியின் படி நடவடிக்கை எடுக்கப்படும். புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ பயந்து அஜித் பவார் இந்த முடிவை எடுத்தாரா என்று தெரியவில்லை. எனக்குக் கிடைத்த தகவலின்படி 10-11 எம்.எல்.ஏ.க்களே அவருடன் ராஜ்பவனுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேர் இங்கு எனக்கு அருகில் அமர்ந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்ட நிலையில், “இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்றும் சரத் பவார் குறிப்பிட்டார்.
ஆளுநர் மாளிகைக்குச் சென்ற தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர சிங்கானே கூறுகையில், “அஜித் பவார் என்னைத் தொடர்புகொண்டு சில விஷயங்கள் பேச வேண்டும் என்று அழைத்தார். நானும் சில எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றோம். அங்கு சென்றபோதுதான், அதற்கு முன்பாகவே பதவியேற்பு நிகழ்வு முடிந்துவிட்டது தெரியவந்தது. நான் விரைந்து சரத் பவாரிடம் வந்து, அவருடன் இருப்பதாக தெரிவித்தேன்” என்றார்.
இதுபோலவே, தங்களை அறியாமல் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றுவிட்டதாகவும், உண்மை தெரிந்தவுடன் விரைந்து வந்து சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் சந்தீப் கிஷர்சாகர் மற்றும் சுனில் பூசரா ஆகிய எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், “முன்பு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பாஜக விளையாட்டை நடத்தியது. தற்போது புதுவிதமான விளையாட்டை நடத்திவருகிறது. மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தல் வர வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. முடிந்தால் சிவசேனாவை உடைத்து பாருங்கள். அப்படி நடந்தால் மகாராஷ்டிரா தூங்காது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.